Monday, June 23, 2025
Home செய்திகள் சொந்த கட்டிடத்தில் குடோனுடன் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

சொந்த கட்டிடத்தில் குடோனுடன் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

by Lakshmipathi

ஈரோடு : நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த சொந்த கட்டிடத்தில் குடோன் வசதியுடன் அமைக்க வேண்டும் என ஈரோட்டில் நடந்த வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர வேளாண் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தில் உள்ள விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்று கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து, கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்தனர்.

கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கம் நல்லசாமி பேசுகையில்: பவானிசாகர் அணையில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. மழையால் நீர்வரத்தும் அதிகரித்துள்ளதால், ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்னதாக பாசனத்துக்கு நீர் திறக்க வேண்டும். அதற்கு முன் கீழ்பவானி வாய்க்காலை தூர்வாரி, ஆக்கிரமிப்பை அகற்றி, நீர் திறப்பு தேதியை அறிவிக்க வேண்டும்.

மேட்டூர் வலது கரை பாசன விவசாயிகள் சங்க பழனிசாமி பேசுகையில்: மேட்டூர் வலது கரை வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும். அணையில் நீர் உள்ளதால், உரிய காலத்தில் பாசனத்துக்கு நீர் திறக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள 5 சாய ஆலைகளை கடந்த வாரம் மின் இணைப்பு துண்டித்து செயல்பாட்டை நிறுத்தினர். பெரிய ஆலைகளிலும் சாயக்கழிவை வெளியேற்றுவதை தடுக்க வேண்டும், என்றார்.

காலிங்கராயன் வாய்க்கால் பாசன சபை வேலாயுதம் பேசுகையில்: பேபி வாய்க்காலை தூர்வாரி, சாக்கடை, சாயக்கழிவை வாய்க்காலில் கலப்பதை தடுக்க வேண்டும். அணையில் தண்ணீர் உள்ளதால் ஜூன் 15ம் தேதி தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். காலிங்கராயன் வாய்க்கால், பாசன பகுதியை முழுமையாக ட்ரோன் மூலம் சர்வே செய்ய வேண்டும்.

கணபதிபாளையம் நெல் கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பில்லை. திறந்த வெளியில் நெல், மூட்டைகள் உள்ளது. போதிய ஆட்கள் இல்லாததால், கொள்முதல் குறைவாக நடக்கிறது, என்றார்.
தமிழக விவசாயிகள் சங்க பெரியசாமி பேசுகையில்: கீழ்பவானியில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால், 3 மாதத்துக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி, முழுமையாக தூர்வாரி, அறிக்கையில் தெரிவித்தபடி சுற்றுச்சுவர் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நகைக்கடனுக்கு ரிசர்வ் வங்கி விதித்த நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்றார்.

பழங்குடியினர் நல அமைப்பு குணசேகரன் பேசுகையில்: சென்னை பல்கலை காலநிலை மாற்ற ஆராய்ச்சி மையம், தனது ஆய்வறிக்கையில், ‘ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் உன்னிச்செடி, சீமைக்கருவேல், சீமை தகரை போன்றவை அதிகம் வளர்ந்து காட்டின் வளத்தை அழிப்பதாக கூறி உள்ளனர்.

இந்த பகுதி காடுகளை காப்பு காடுகளாக அறிவித்து, பழங்குடியினர் நிலம் பிற மக்களிடம் உள்ளதை திரும்ப பெற்றுத்தர வேண்டும். வன வளம் அழிப்பை தடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில், வனத்துக்குள் வளர்ந்துள்ள தேவையற்ற தாவரங்களை அகற்ற வேண்டும். மலையில் உரம், பூச்சி கொல்லி மருந்து, பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து செல்வதை தடுக்க வேண்டும்,என்றார்.

தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கம் சுதந்திரராசு பேசியதாவது: தமிழகத்தில் அதிக வெப்பத்தாலும், மழை குறைவாலும், நோய் தாக்கத்தால் தேங்காய் உற்பத்தி சரிந்துள்ளதை சரி செய்ய நடவடிக்கை தேவை. மரவள்ளி கிழங்குக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும். அல்லது அரசு கொள்முதல் செய்ய வேண்டும், என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க முனுசாமி பேசியதாவது: பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையில் கடந்த 2004-2005 உள்ளிட்ட சில ஆண்டுக்கு, ஆலையின் லாபத்தில் பங்குத்தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மின்வாரியம் மூலம் ராசிபுரம் – பாலவாடி, திங்களூர்-திருவாச்சி மின் பாதை அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடன் வழங்க வேண்டும்.பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும். பாலுக்கான ஊக்கத்தொகையை உடனுக்குடன் வழங்க வேண்டும், என்றார்.

கரும்பு வளர்ப்போர் சங்கம் குப்புசாமி பேசுகையில்: அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய ஆட்கள் இல்லை. தாமதமாகிறது. மழையில் நனைந்து முளைத்துள்ளன. வரும் காலங்களில் கொள்முதல் நிலையங்கள், சொந்த கட்டடத்தில், குடோன் வசதியுடன் இயங்க வேண்டும். பெத்தாம்பாளையத்தில் சன்ன ரகத்தை கொள்முதல் செய்ய மறுக்கின்றனர்,என்றார்.

இதையடுத்து துறை வாரியான அதிகாரிகள் பதில் அளித்து பேசுகையில்: மேட்டூர் வலது கரை வாய்க்கால், கீழ்பவானியில் ஆங்காங்கு சீரமைப்பு பணிகள், தூர்வாரும் பணிகள் திட்டமிட்டபடி நடக்கிறது.

அணையில் நீர் உள்ளதால், ஆயக்கட்டு பகுதிக்கு நீர் திறப்பு குறித்து அரசுக்கு முன்னதாக பரிந்துரை அனுப்பி விவசாயிகளுக்கு நீர் திறப்பு குறித்து தெரிவிக்கப்படும். நகைக்கடன் பெறும்போது, நகைக்கான ரசீது அல்லது சுய ஒப்பம் பெற்று வழங்கலாம் என விதிகள் உள்ளது. தவிர வேறு சில விதிமுறைகளை தளர்த்துவதாக கூறி உள்ளனர்.உரிய உத்தரவு வந்ததும், அப்பிரச்னை சீராகும்.

பண்ணாரி சர்க்கரை ஆலையில்கடந்த, 2004-2005, 2008-2009ம் ஆண்டு லாபத்தில் 1,014 விவசாயிகளுக்கு, ரூ.1.35 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அதில், 479 விவசாயிகளுக்கு, ரூ.79 லட்சம் வழங்கிவிட்டோம். மற்றவர்களுக்கு முகவரி, பிற ஆவணங்கள் குறைபாடு உள்ளதால் விரைவில் வழங்குவோம். பால் கொள்முதல் விலை உயர்வு பற்றி அரசுக்கு பரிந்துரைக்கிறோம்.

கடந்த டிசம்பர் மாதம் வரை பாலுக்கான ஊக்கத்தொகை, சொசைட்டி மூலம் பால் வழங்கியோருக்கு வழங்கினோம். ஜனவரி முதல் ஆவின் நிர்வாகம் நேரடியாக பால் வழங்குவோருக்கு வழங்கி வருகிறது. கடந்த ஏப்ரல் வரை வழங்கிவிட்டோம்.

தென்னையை தாக்கும் வெள்ளை ஈயை கட்டுப்படுத்த, ஒட்டுண்ணி உற்பத்தி செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில் 37 நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி முதல் செயல்பட்டு 27,818 டன் நெல் கொள்முதல் செய்துள்ளோம். மழை பெய்தபோது தாமதம் ஏற்பட்டது.

மையங்களில் தேவையான அளவு பாலித்தீன் கவர், சாக்கு உள்ளன. சன்ன ரக நெல்லை அரவை செய்தால் 58 சதவீதம்தான் அரிசி கிடைக்கிறது.

68 சதவீதம் கிடைக்க வேண்டும் என அரவை மில்காரர்கள் சொல்வதால், அவற்றை வாங்க மறுக்கின்றனர். எனவே, சன்ன ரகத்தை குறைவாக வாங்குகிறோம். அதை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் விற்பனை செய்ய கேட்டுள்ளோம், என்றனர்.

கூட்டத்தில் வேளாண் துணை இணை இயக்குநர் தமிழ்செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்) லோகநாதன், வேளாண் பொறியியல் பிரிவின் செயற்பொறியாளர் மனோகரன், தோட்டக்கலைத் துறை துணை இயக்கநர் குருசரஸ்வதி, ஈரோடு விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு வசதி

கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசுகையில், நெல் கொள்முதல் நிலையங்கள் பாதுகாப்பு வசதியுடன் சொந்த கட்டிடங்களில் செயல்படும் வகையில் இடம் தேர்வு செய்கிறோம்.ஒரு இடத்தை வருவாய் துறை கண்டறிந்து, தாசில்தார் ஆய்வு செய்துள்ளார்.

சன்ன ரக நெல்லை அரவை மில் குறைவாக வாங்குவதால், வேளாண் துறை செயலரிடம் பேசி, ஒழுங்கு முறை விற்பனை கூடம் மூலம் கொள்முதல் செய்ய கேட்டுள்ளோம். வருகிற 11ம் தேதி முதல்வர் வரும்போது வேளாண் துறை செயலரும் வருகிறார். அப்போது பேசி இறுதி செய்யப்படும் என்றார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi