*விழுப்புரம் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் எச்சரிக்கை
*ஏரிகளில் கருவேலமரங்களை அகற்றவும் வலியுறுத்தல்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கடந்தாண்டு விவசாயிகள் அனுப்பிய கரும்புக்கான மானிய தொகையை 10 நாட்களுக்குள் வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வட்டாட்சியர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. தாசில்தார்கள், வேளாண்மை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம், வானூர், திருவெண்ணெய்நல்லூர் ஆகிய 5 தாலுகாவைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதி கோரிக்கைகளை தெரிவித்தனர்.
அதில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் பெயரளவில் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு பதில் அளிக்கும் வகையிலான துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை. குறிப்பாக வனத்துறை, மின்வாரிய துறை அதிகாரிகள் பங்கேற்காததால் விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு எப்படி தீர்வுகாண முடியும்.
வருகின்ற கூட்டங்களில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கும் முறையாக கூட்டம் நடைபெறுவதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று கூறினர். மேலும் விழுப்புரம் கோட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் கருவேல மரங்களை அகற்றிட வேண்டும்.
தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவிட்டும் இதனை நிறைவேற்றாமல் உள்ளனர். பெஞ்சல் புயலால் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டன. பெஞ்சல் புயலில் சேதமடைந்த தென்பெண்ணை, மலட்டாறு, பம்பை ஆற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும். சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 108 அடியை எட்டிய நிலையில் எப்போது வேண்டுமானாலும் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கலாம். மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கிராமங்கள் பாதிக்கப்படும்.
எனவே, கரைகளை விரைந்து பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்டமங்கலம் வட்டாரத்தில் பல ஏரிகளில் அனுமதியின்றி சாலை போடப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மிஷின் நெல் நடவுக்கு மானியம் வழங்குவது போல் கை நடவுக்கும் மானியம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து பெற்றுத்தர வேண்டும்.
முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் கடந்த ஆண்டு (2024) கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு மானிய தொகை இதுவரை வழங்கவில்லை. இந்த தொகையை 10 நாட்களுக்குள் வழங்காவிட்டால் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துவோம். விவசாயிகளுக்கு வழங்கிய தக்கைபுல் விதை தரம் இல்லாத முளைப்புதிறன் இல்லாமல் வீணாகியுள்ளது.
தரமான விதைகள் வழங்க வேண்டும். வானூர் தாலுகா நல்லவூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யாதது குறித்து ஏற்கனவே ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்பட்டும் இதுவரை விவசாயிகளுக்கு வழங்காமல் உள்ளனர்.
எனவே, இதனை விரைந்து பெற்றுத்தர வேண்டும். காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு விரைந்து இழப்பீட்டு தொகை பெற்றுட்ஹ்தர வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய கோட்டாட்சியர் முருகேசன் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் குறைகள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய பதில் அளிக்க உத்தரவிட்டதையடுத்து கூட்டம் முடிவடைந்தது.