கம்பம் : தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும்.
தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள தேவதானப்பட்டி, கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம்.
அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது.
தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது.
இங்கு நெல், பயிர் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. மேலும் மேற்குத்தொடர்ச்சி மலையின் வரிசையில் ஏலம், மிளகு, காபி, ஆரஞ்சு, மா, சப்போட்டா, கொய்யா, இலவு விவசாயம் நடக்கிறது.விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, கொள்கைகளும், நோக்கங்களும் அரசால் வகுக்கப்படுகின்றன.
இதில் விவசாயிகளுக்காகவும், விவசாயத்தைத காக்கவும் உள்ள அரசாக, திமுக அரசு தற்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மானியத்துடன் அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திமுக அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, மகளிர் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் உள்ளாட்சிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும், நீர்நிலை மேம்பாட்டுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் முன்னுரிமை அளித்து வருகிறார். இதன்படி, தேனி மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14,700 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. பாசனத்திற்காக ஜூன் ஒன்றாம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் முல்லைப் பெரியாற்றிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார். தொடர்ந்து 120 நாட்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 800 கன அடி வீதம் முல்லைப் பெரியாற்றிலிருந்து தமிழகத்திற்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேலும் தென்மேற்கு பருவமழையையொட்டி இப்பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் முல்லைப் பெரியாற்றில் 133 அடி நீர் இருப்பு உள்ளதால், இந்த வருடம் முதல் போக சாகுபடிக்கு வயல்வெளிகளை விவசாயிகள் தயார் செய்து வருகின்றனர்.
வயல்வெளிகளில் நாத்து பாவுவது, உழவுப்பணிகள் செய்வது, களை எடுத்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் வயல் வரப்புகளை பலப்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.