*வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தல்
கீழ்பென்னாத்தூர் : மண்வளம், நீர் வளத்தை மேம்படுத்த விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.
இந்த கோடை மழையைப் பயன்படுத்தி கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தில் நிலச்சரிவிற்கு குறுக்காக விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும். கோடை உழவு செய்வதன் காரணமாக பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன.
அறுவடைக்குப்பின் வேரின் அடிக்கட்டைகள் மக்குவதற்கு அதிக வாய்ப்பின்றி மேல் மண் கடினமாக இருக்கும். அதனால் பெய்யும் மழைநீர் பூமிக்குள் இறங்காமல் அப்படியே வடிந்து ஓடி வீணாகிவிடும். எனவே மழைக்குப்பின் நிலச்சரிவுக்கு குறுக்காக உழவு செய்ய வேண்டும்.
அவ்வாறு உழவு செய்வதால் மண் மிருதுவாகி மழை நீரை நன்கு உறிஞ்சி நிலத்திற்குள் இறங்கும்.
இதனால் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். மண் அரிப்பு காக்கப்படும் சத்துக்கள் வீணாகாமல் தடுக்கப்படும். முதற்பயிரின் தூர்கள் மக்குவதோடு, களைகளும் கட்டுப்படுத்தப்படும்.
மண்ணில் உள்ள கூண்டுப் புழுக்கள் வெளியில் கொண்டுவரப்பட்டு, பறவைகள் மூலம் கொத்தி அழிக்கப்படும். மேலும் நோய்களை ஏற்படுத்தும் பூஞ்சான்கள் மற்றும் பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் அவற்றின் வித்துக்கள் அழிக்கப்பட்டு, அடுத்த பயிரில் நோய்த் தாக்குதல் குறையும். மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதால் மண்ணின் அமைப்பும் வளமும் மேம்படுகிறது.
எனவே தற்போது பெய்யும் கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் நிலத்தை உழவு செய்து மண்வளம் மற்றும் நீர் வளத்தை மேம்படுத்த வேண்டும் என்று கீழ்பென்னாத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் அன்பழகன் அறிவுறுத்தினர்.