திருமலை: ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளிலும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்றும், ஆகஸ்ட் 15ம்தேதி முதல் மகளிருக்கான இலவச பஸ் சேவை திட்டம் மாநிலத்தில் அமலுக்கு வர உள்ளதாகவும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். ஆந்திர மாநிலம் கர்னூலில் `ஸ்வர்ணாந்திர, ஸ்வச்சாந்திரா’ என்ற சுற்றுப்புற தூய்மைபடுத்தும் நிகழ்ச்சியை முதல்வர் சந்திரபாபுநாயுடு தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள இந்த நிகழ்ச்சி மூலம் அனைவரும் விழிப்புணர்வு பெறவேண்டும். ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமையன்று பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை ஒருங்கிணைந்து தூய்மைப்படுத்தவேண்டும்.
கடந்த 1999ம் ஆண்டு ஆந்திராவில் உழவர் சந்தைகளை நிறுவினேன். இதன்மூலம் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது. நியாயமான விலையில் பொதுமக்களுக்கும் பொருட்கள் கிடைக்கிறது. மாநிலத்தில் தற்போது 125 உழவர் சந்தைகள் உள்ளன. எனவே விரைவில் 175 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிதாக உழவர் சந்தைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி விற்பனை நடக்கும்.
உலக அளவில் யோகா தினத்தை மேலும் பெருமைபடுத்த விசாகப்பட்டினத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறோம் இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். யோகா பயிற்சியை அனைவரும் ஒருநாளைக்கு அரை மணி நேரமாவது செய்யவேண்டும். பொதுமக்களுக்கு ஆன்லைனிலும் யோகா பயிற்சி வழங்கப்படும். அக்டோபர் 2ம்தேதிக்குள் மாநிலத்தில் எங்கும் குப்பைகள் இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கிறோம். தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயணம், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம்தேதி அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.