*அதிகாரிகளுடன் வாக்குவாதம்- பரபரப்பு
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டையில் மண்டல ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இங்கு விவசாயிகளுக்கு தேவையான விவசாய விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ரகமான கதிரி லெப்பாக்ஸி என்ற ரக மணிலா விதைகள் கொடுப்பதாக தகவல் பரவியது. இதன் காரணமாக விருத்தாசலம், திட்டக்குடி, மங்களூர், நல்லூர் மற்றும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் மண்டல ஆராய்ச்சி நிலையத்திற்கு வந்தனர்.
தொடர்ந்து நீண்ட நேரம் ஆகியும் அதிகாரிகள் மத்தியில் எந்த தகவலும் சரியாக சொல்லாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் தற்போது விதைகள் இருப்பு இல்லை. ஏற்கனவே 500 விவசாயிகளுக்கு தான் இருப்பு இருந்தது. அதனையும் வழங்கி முடித்து விட்டோம். தற்போது மீண்டும் விதைகள் வந்தால் மட்டும் தான் வழங்க முடியும் என கூறினர்.
ஆனால் அதற்கு விவசாயிகள் ஏற்கனவே 18ம் தேதி அன்று கொடுப்பதாக அறிவித்தீர்கள். அப்போது வந்தோம். அப்போது இன்று தருவதாக கூறினீர்கள். ஆனால் தற்போது இல்லை என சொல்கிறீர்கள் என கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து விவசாயிகளை சமாதானம் செய்து வைத்ததுடன் விதைகள் வந்ததும் அவரவர் செல்போனுக்கு தகவல் தெரிவிக்கிறோம், அதன் பின்பு வந்து வாங்கிக் கொள்ளலாம் என கூறியதன்பேரில் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.