கோவை, நவ. 15: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வேளாண்மை பொறியியல் துறை மூலம் உழுவை இயக்குநர் பயிற்சி, ஓட்டுநர் உரிமம் மற்றும் விவசாய இயந்திரங்கள் செயல் விளக்கம் மற்றும் பராமரித்தல் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி கோவை, மருதமலை ரோட்டிலுள்ள அரசு இயந்திர கலப்பை பணிமனையில் துறை வல்லுநர்களால் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் வைத்திருப்பவர், முன்னோடி விவசாயிகள், தொழில் முனைவோர் என 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். பயிற்சி காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை நடத்தப்படும். விண்ணப்பிக்க இன்று கடைசிநாள் ஆகும். விண்ணப்பத்தை வங்கி புத்தகம் முதல் பக்க நகல், ஆதார் அட்டை, கல்வித்தகுதிக்கான சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சாதிச்சான்று இணைத்து பதிவு செய்ய வேண்டும்.
இதில், இயந்திரம் மற்றும் கருவிகள் தயாரிக்கும் முன்னோடி நிறுவனங்களில் சிறப்புப் பயிற்சி மற்றும் தொழில் நுணுக்கங்களும் கற்றுத்தரப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் சுயவேலைவாய்ப்பு மற்றும் முன்னணி நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளில் பணிபுரியும் தகுதிகளை வளர்த்து கொண்டு அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறக்க ஏதுவாக அமையும். எனவே, பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நபர்கள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப்பொறியியல்துறை, இயந்திர கலப்பை பணிமனை, புளியமரம் பஸ்ஸ்டாப், மருதமலை ரோடு, கோவை – 641 003 என்ற முகவரியில் அல்லது 0422 – 2962668 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், TNSDC WEB PORTAL எனும் இணையதளத்தில் தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.