திருச்சி : ஒன்றிய அரசை கண்டித்தும், நிபந்தனையின்றி ரூ.2 லட்சம் நகைக்கடன் வழங்கக்கோரியும் திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் தேசிய வங்கியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள ஸ்டேட் வங்கி மண்டல அலுவலகத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் நேற்று காலை முற்றுகை போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். இதில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதைதொடர்ந்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அவர்களிடம் கன்டோன்மென்ட் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு பேரணியாக சென்றனர். கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நிபந்தனை இல்லாமல் ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் வழங்க வேண்டும். பெரும்முதலாளிகள் பயனடையும் வகையில் ரூ.2 லட்சத்துக்கு மேல் மட்டுமே விவசாய கடன் வழங்கும் நடைமுறையை வங்கிகள் கைவிட வேண்டும்.
நகைக்கடன் வழங்குவதற்கு நகையை விலைக்கு வாங்கிய ரசீதுகளை விவசாயிகளிடம் கேட்க கூடாது. நகையின் தரத்தை வங்கி ஊழியர்கள் நிர்ணயம் செய்ய வேண்டும். ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள், நீர்வரத்து பாதைகளை தூர்வார வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முறையை கைவிட வேண்டும் என்ற கோஷமிட்டனர்.