*தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கோரிக்கை
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக வீசிய சூறை காற்றில் அருமநல்லூர், சிறமடம், ஞாலம், கொக்கல் விளாகம், அழகியபாண்டியபுரம், திடல், ஈசாந்திமங்கலம், தெள்ளாந்தி போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தது. இந்த நிலையில் வாழைகள் சேதம் அடைந்ததை, முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் நேற்று பார்வையிட்டார்.
கொக்கல்விளாகம், திடல் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். அப்போது தோட்டக்கலை உதவி இயக்குநர் சந்திரலேகா, வருவாய் ஆய்வாளர் பீர்முகமது ராபி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கூறுகையில், இரு தினங்களாக பெய்த கனமழை மற்றும் சூறைகாற்று காரணத்தினால் ஞாலம் கொக்கல்விளாகம், அருமநல்லூர், அந்தரபுரம், திடல், அழகியபாண்டியபுரம், தெரிசனங்கோப்பு, ஈசாந்திமங்கலம், தெள்ளாந்தி பகுதியில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்து உள்ளன. இதனால் விவசாயிகள் முற்றிலும் வேதனை அடைந்துள்ளனர்.
இவர்களுக்கு சேத இழப்பீடு தொகையாக 1 ஏக்கருக்கு 6 ஆயிரத்து 800 இழப்பீடு தொகை வழங்குவதாக கூறப்படுகிறது. ஆனால் வாழை விவசாயிகள் 1 ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் செய்ய பல லட்சம் செலவு செய்துள்ள நிலையில், இந்த இழப்பீடு தொகையானது போதுமானதாக அமையாது. வாழை பயிர் மற்றும் நெற்பயிர் செய்கின்ற விவசாயிகள் இயற்கை சீற்றங்களால் பாதிப்படைகின்ற போது அதற்கான இழப்பீடை பெறுவதற்காக காப்பீடு செய்கின்றனர்.
இதுபோன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுகின்ற போது பல காரணங்களை கூறி இழப்பீட்டு தொகையினை முறையாக வழங்குவது இல்லை. எனவே விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில், பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.