விவசாயிகள் பலர் விதையை தேர்வு செய்வதில் கோட்டையை விடும் நிகழ்வுகள் நடக்கின்றன. விதைத்தேர்வில் தோல்வி நடக்கும்போது விவசாயிகளின் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகும் நிலை ஏற்படுகிறது. இதைத் தடுக்க விவசாயிகள் விதைப்பண்ணைகளை நாடி வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை விதை நாற்றுகளை வாங்க விவசாயிகள் ஓசூரில் செயல்படும் விதைப்பண்ணைகளையே நம்பி இருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது நெல்லை மாவட்டத்திலேயே பலர் விதைப்பண்ணை தொழிலில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறார்கள். அதன்படி நெல்லை மாவட்டம் மானூரைச் சேர்ந்த விவசாயியான பாஸ்கரன் என்பவர் விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் தனியார் நிறுவன வேலையை உதறிவிட்டு 11 ஆண்டுகளுக்கு முன்னர் விதைப்பண்ணை ஆரம்பித்தார். இப்போது அந்தப் பண்ணை அவருக்கு அந்தத் தொழில் பெரிய அளவிலான வருமானம் கொடுக்கும் தொழிலாக மாறி இருக்கிறது. எட்டாங்குளம் கிராமத்தில் உள்ள தனது விதைப்பண்ணையில் பராமரிப்புப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்த பாஸ்கரனைச் சந்தித்தோம்.
“எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் டிப்ளமோ பட்டயப்படிப்பை முடித்து விட்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தேன். அந்த காலகட்டத்தில் நெல்லை மாவட்ட விவசாயிகள் விதை நாற்றுகளை ஓசூரில் இருந்து வாங்கிக்கொண்டு இருந்தார்கள். அப்போது விதைப்பண்ணைகள் நெல்லையில் இல்லை.அடிப்படையில் நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் விதைப்பண்ணை வைத்து தொழிலில் ஈடுபட எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. விதைகள் குறித்து நன்கு கற்றுக்கொண்டேன். 11 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது பூர்வீக நிலத்தில் 50 சென்ட் நிலத்தில் ரூ.3 லட்சம் செலவில் பசுமைக்குடில் அமைத்து விதைப்பண்ணை அமைத்தேன்.தரமான விதைகளைக் கொடுப்பதில் எவ்வித சமரசமுமின்றி செயல்பட்டேன். அதன் காரணமாக விவசாயிகள் நல்ல மகசூல் பெற்றனர். ஒருமுறை விதைநாற்றுகளை வாங்கிய விவசாயிகள் மீண்டும் மீண்டும் வரத்தொடங்கினர். அவர்களிடமிருந்து அருகில் உள்ள விவசாயிகளும் எனது நாற்றுப்பண்ணை குறித்து அறிந்து வந்தனர்.ரூ.3 லட்சத்தில் ஆரம்பிக்கப்பட்ட விதைப்பண்ணை தொழில் தற்போது ரூ.25 லட்சம் மதிப்பு கொண்டதாக வளர்ந்து இருக்கிறது. மொத்தம் 3 பசுமைக்குடில்கள் உள்ளன. 18 பேர் மாத ஊதியத்தில் வேலை செய்கிறார்கள். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆண்டுதோறும் 3000 விவசாயிகள் என்னிடம் நாற்றுகளை வாங்கிச் செல்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் ராஜபாளையம் விவசாயிகள் எனது பண்ணைக்கு வந்தனர். தற்போது தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளும் நாற்றுகளை வாங்கிச் செல்கிறார்கள். தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி என பல மாவட்டங்களில் ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு நாற்றுகளின் தேவை இருக்கிறது. அதனால் தான் நானே மிளகாய், கத்தரி, தக்காளி, கேந்தி உள்ளிட்ட விதைகளை அந்தந்த சீசனுக்கு ஏற்ப விதைத்து நாற்றுகளாக விவசாயிகளுக்கு கொடுத்து வருகிறேன்.விதைப்பண்ணைத் தொழிலில் வெற்றி பெற விவசாயிகளின் நம்பிக்கையைப் பெற வேண்டியது அவசியம் ஆகும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட விதைகளையே விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகிறேன். ஒருவேளை அந்த விதைகள் மூலமாக எதிர்பார்த்த மகசூல் வரவில்லை என்றால் சம்மந்தப்பட்ட விதை நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு பெற்றுக் கொடுக்க முடியும். விதைகளை ஒருமுறைக்கு பலமுறை ஆய்வு செய்த பின்னர் நல்ல மகசூல் கொடுக்கக்கூடியது என தெரிய வந்த பின்னர்தான் அதை விற்பனைக்கு கொண்டு வருகிறேன்.பொதுவாக விதை நன்றாக வளர 30 முதல் 45 நாட்கள் வரை ஆகும்.
அதற்கான கால அவகாசத்தை கொடுக்க வேண்டியது அவசியம். அதை முன்கூட்டியே விவசாயிகளிடம் தெரிவித்து விடுவோம். புதிதாக இந்த தொழிலுக்கு வருபவர்கள் விதைப்பண்ணை குறித்து முழுவதுமாக ஆராய்ந்து விட்டு உள்ளே இறங்க வேண்டும். முதலில் விவசாயிகளின் நலனில்தான் விதைப் பண்ணைகளின் வளர்ச்சி உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். என்னிடமிருந்து தென்காசி மாவட்டத்தில் இருந்து மட்டும் ஆண்டுதோறும் 50 லட்சம் நாற்றுகளை விவசாயிகள் வாங்கிச் செல்கிறார்கள். அதற்குக் காரணம் தரமான விதைகள்தான். தரமான விதைகளை விதைப்பண்ணைகள் உற்பத்தி செய்து கொடுப்பதில் எந்த சமரசமும் செய்யக்கூடாது.ஓர் ஆண்டுக்கு அனைத்து செலவுகளும் போக ரூ.10 லட்சம் வருமானம் தரும் தொழிலாக விதைப்பண்ணைத் தொழில் இருக்கிறது. இதை மேலும் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் இருக்கிறேன். அடுத்ததாக பந்தல் கொடி விவசாயமும் செய்யலாம் என திட்டமிட்டு இருக்கிறேன். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன்’’ என நம்பிக்கை பொங்க பேசினார்.
தொடர்புக்கு
பாஸ்கரன்: 94431 74693.