ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே கணபதி சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் பூவையா(47). இவர் புல்லுபத்தி மலை அருகே பன்றி பண்ணை நடத்தி வந்தார். அங்கு தென்னந்தோப்பையும் குத்தகைக்கு எடுத்து பராமரித்து வந்தார். இவர் கடந்த 8ம் தேதி திடீரென மாயமானார். இந்நிலையில், ராஜபாளையம் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிக்கு செல்லும் அய்யனார் கோயில் பாதையில் முடங்கியாறு பாலம் பகுதியில் அழுகிய மனித தலை கிடப்பதாக, ராஜபாளையம் வடக்கு காவல்நிலையத்திற்கு நேற்று தகவல் கிடைத்தது.
போலீசார் சென்று தலையை கைப்பற்றி விசாரித்ததில், அது பூவையாவின் தலை என தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பூவையாவின் தென்னந்தோப்பில் கணபதிசுந்தரநாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன்கள் ஈஸ்வரன்(19), தளபதி(21), இவர்களின் சித்தப்பா பாலகிருஷ்ணன் ஆகியோர் மாடுகளை மேய்த்துள்ளனர்.
இதில் ஏற்பட்ட தகராறில் கடந்த 8ம் தேதி பூவையாவை ஈஸ்வரன், அவரது அண்ணன் தளபதி, சித்தப்பா பாலகிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து வெட்டி கொலை செய்து, அவரது தலை, வலது கால் ஆகியவற்றை துண்டித்து உள்ளனர். பின்னர் தலையை முடங்கியாறு பாலம் பகுதியில் வீசிவிட்டு, உடலை புல்லுபத்தி மலை அடிவாரத்தில் ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில் புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அங்கு சென்று உடலை தோண்டி எடுத்தனர். கொலை நடந்த இடமான சேத்தூர் ஊரக காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்தனர்.