சென்னை: வேளாண் துறையில் விவசாயிகளுக்கு விடியலை ஏற்படுத்தும் உழவன் செயலி மூலம் 19 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் வேளண்மை உழவர் நலத்துறை மூலம் உழவன் மொபைல் போன் அப்ளிகேஷன் 2022ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியின் மூலம் விவசாயிகள் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு தேவையான 24 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், தரிசு நிலங்கள் அனைத்தையும் சாகுபடி நிலங்களாக மாற்ற விவசாயிகள் குழுவாக சேர்ந்து பதிவு செய்யவும் உழவன் செயலியில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இந்த செயலியின் வழியாகத் தான் அரசு அளிக்கும் வேளாண் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் வேளாண் கல்விச் சுற்றுலாவில் பங்கேற்க முன்பதிவு செய்ய முடியும். விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், கொள்முதல் செய்யவும் வியாபாரிகளின் முகவரிகள் உழவன் செயலியில் பதிவிடப்பட்டுள்ளன. மேலும் விவசாயிகள் தங்கள் பகுதியில் இருக்கும் கால்நடை மருத்துவர்களையும் இதன் மூலம் தொடர்பு கொள்ள முடியும். மிகவும் பயனுள்ள உழவன் செயலியை விவசாயிகள் ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ப்பட்ட உழவன் செயலியில் பெயர், முகவரி, மொபைல் எண் மற்றும் ஆதார் போன்ற தங்களது அடிப்படை தகவல்களைப் பதிவு செய்து பயன்படுத்தலாம். இந்நிலையில், இந்த உழவன் செயலி மூலம் 19 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2018ம் ஆண்டு முதல் உழவன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் கடந்த 2022ம் ஆண்டில் பல்வேறு சேவைகளுடன் புதுப்பிக்கப்பட்டு தற்போது 24 வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இச்செயலியில் உள்ள சேவைகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழில்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடையே பிரபலமாகி வரும் இந்த செயலியினை இதுவரை சுமார் 19,01,196 பயனாளிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு அரசின் வழிகாட்டுநெறிமுறைகள் அடிப்படையில் மானியம் அளிக்கப்படுகிறது.
அதேபோல், வேளாண் உழவர் நலத்துறை மூலம் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான இடுபொருட்களை பெறுவதற்கு முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வேண்டும். அதேபோல் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைச்சலை மேற்கொள்வதற்கு முன்பு மண் வளம் குறித்து விளைநிலங்களின் தற்போதைய நிலையை அறிய மீண்டும் மண் ஆய்வு செய்து பதிவிட வேண்டும். ஏனென்றால் ஒருமுறை ஆய்வு செய்ததை மீண்டும் பயன்படுத்துவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, இந்த செயலில் பயிர் சாகுபடி வழிகாட்டுதலில் விளைபயிர்களில் ஏற்படும் பாதிப்புகளின் போட்டோ அடங்கிய கோரிக்கைகளை செயலில் பதிவிட்டால் 48 மணி நேரத்திற்குள் அதற்கான தீர்வு கிடைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
உழவன் செயலியின் சேவைகள்
* மண் வளம் : வேளாண் நிலங்களில் உயரிய மண் மாதிரி ஆய்விற்கான முன்பதிவு செய்து கொள்ளலாம்.
* மானியத் திட்டங்கள்: வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் பற்றி தகவல் அறிந்து கொள்ளலாம்.
* இடுபொருள் முன்பதிவு: வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் விநியோகிகப்படும் அனைத்து வகையான இடுபொருட்களையும் பெறுவதற்கு பதிவு செய்திடலாம்.
* பயிர் காப்பீடு விவரம் : அறிவிக்கப்பட்ட கிராமங்களுக்கு பயிர் வாரிவான காப்பீட்டுக் கட்டணம், காப்பீடு செய்வதற்கு தேவையான ஆவணங்கள், அணுக வேண்டிய இடங்கள் மற்றும் பயிர்க்காப்பீட்டின் தற்போதைய நிலை பற்றிய தகவல்கள் அறிந்து கொள்ள முடியும்.
* உரங்கள் இருப்பு நிலை: வேளாண்மை, தோட்டக்கலைத்துறைகளில் உங்கள் அருகில் உள்ள கிடங்கில் தினசரி விதை இருப்பு, கன்றுகள் இருப்பு.
* விதை இருப்பு நிலை : வேளாண்மை, தோட்டக்கலைத் துறைகளில் உங்கள் அருகில் உள்ள கிடங்கில் தினசரி விதை இருப்பு மற்றும் கன்றுகள் இருப்பு குறித்து அறிந்துகொள்ளலாம்.
* வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு: வேளாண் பொறியியல் துறை மற்றும் விவசாயிகளிடம் வாடகைக்கு உள்ள இயந்திரங்கள், வாடகை, வாடகை முன்பதிவு பற்றிய விவரங்கள்.
* சந்தை விலை நிலவரம்: ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், உழவர் சந்தைகளில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகளின் தினசரி சந்தை விலை.
* வானிலை முன் அறிவிப்பு: மாவட்ட வாரியாக தினசரி வானிலை முன்னறிவிப்பு மற்றும் தமிழ் மொழியில் உள்ளூர் வானிலையாளர் அன்றாடம் வழங்கும் வானிலை முன்னறிவிப்பு.
* உதவி வேளாண், தோட்டக்கலை அதிகாரி தொடர்பு திட்டம்: உங்கள் கிராமங்களுக்கு வரும் உதவி வேளாண்மை/தோட்டக்கலை அலுவலர்களின் பெயர், கைப்பேசி எண் போன்ற விவரங்கள்.
* பயிர் சாகுபடி வழிகாட்டி : நில விவரம் மற்றம் பயிர் பதிவு, பூச்சி மற்றும் பயிர்களில் ஏற்படும் நோய்கள் கண்காணிக்கப்பட்டு அறிவுரை வழங்கப்படும்.
* FPO பொருட்கள்: உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் விவரங்கள், அவர்களின் தயாரிப்புகள் பற்றிய தகவல்கள்.
* அணை நீர்மட்டம்: தமிழகத்தின் முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் மேட்டூர் நீர்த்தேக்கத்திற்க்கு ஆதாரமாய் விளங்கும் கர்நாடகாவின் உள்ள 4 முக்கிய அணைகளின் தினசரி நீர் அளவு.
* வேளாண் செய்திகள்: வேளாண்மை தொடர்பான அறிவிப்புகள், துறையின் பத்திரிகை வெளியீடு, தொழில்நுட்பங்கள், விலை முன்னறிவிப்புகள்.
* பூச்சி, நோய் கண்காணிப்பு, பரிந்துரை: பூச்சி, நோய் மேலாண்மைக்கு தேவையான பரிந்துரைகள்.
* அட்மா பயிற்சி மற்றும் செயல்விளக்கம்: அட்மாத் திட்டத்தில் வேளாண் செயல்விளக்கம், கல்விச் சுற்றுலா போன்ற வேளாண் தொழில்நுட்ப பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு.
* உழவன் இ-சந்தை: விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மற்றும் தேவை விவரங்கள்.
* பட்டுப்புழு வளர்ப்புத் துறை: பட்டுக்கூடு கிடைக்கும் இடம், சந்தை விலை மற்றும் பட்டு வளர்ப்புத் துறை தொடர்பான திட்ட விவரங்கள்.
* வேளாண் நிதி நிலை அறிக்கை: வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் தொடர்பான விவரங்கள்.
* கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டம்: விவசாயிகள் தங்கள் தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்ற பதிவு செய்து கொள்வதற்கான வழி வகை.
* பனைமரம் வெட்டுவதற்கு விண்ணப்பித்தல்: பொது, அரசு சார் நிலங்கள் மற்றும் தனியார் நிலங்களில் பனை மரம் வெட்டுவதற்கு அனுமதி பெற விண்ணப்பித்தல்.
* பசுமை இயக்கம் மரக்கன்றுகள்: தமிழ்நாடு வனத்துறை இலவச மரக்கன்றுகள் பெறவதற்கான பதிவு செய்யலாம்.