உடல் உழைப்பை அதிகம் செலுத்தும் தொழில்களில் விவசாயமும் ஒன்று. ஆனால் எவ்வளவுதான் உழைத்தாலும் திட்டமிடல் இல்லாமல் இதில் வெற்றி பெற முடியாது. அவ்வாறு திட்டமிட்டு சாகுபடி செய்தால்தான் எந்தப் பயிராக இருந்தாலும் நல்ல பலனை எதிர்பார்க்க முடியும். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரன் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் இவ்வாறு திட்டமிட்டு விவசாயத்தில் சாதித்து வருகிறார். வயலில் பராமரிப்புப் பணிகளில் தீவிரமாக இருந்த ராஜேந்திரனை சந்தித்தோம்.
‘‘சுமார் 30 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். எங்கள் பகுதியில் உள்ள நிலம் புன்செய் நிலம். இங்கு குளத்துப் பாசனம் இல்லை. நிலத்தடி நீரை நம்பித்தான் விவசாயம் நடக்கிறது. அதுவும் அதிகளவில் கிடைக்காது. குறைந்த நீரில் அதிக விளைச்சலைப் பார்க்க வேண்டும். இப்படி விவசாயம் செய்தவற்கென ஒவ்வொரு பகுதிக்கும் சில நிறைகுறைகள் உள்ளன. அதற்கு ஏற்ப விவசாயம் செய்ய வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம். புதிதாக விவசாயம் செய்ய வருபவர்கள் தங்கள் நிலத்தின் மண் வளம் என்ன? என்பதை முதலில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கு ஏற்பதான் நாம் பயிரிட வேண்டும்.
விவசாயத்தைப் பொறுத்தவரை நாம் விளைவிக்கும் பொருட்களின் தரம் மிகவும் முக்கியம். தரத்தைக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றுவது மண்வளம்தான். அந்த மண்வளத்தைப் பெறுவதற்கு நிலத்தைத் தயார்படுத்த வேண்டும். விவசாயத்தில் நிறைய தோல்விகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எவ்வளவு அனுபவம் இருந்தாலும் எதிர்பாராத காலநிலை மாற்றத்தால் இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம். கடந்த பங்குனி மாதம் ராதாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கத்தை விட வெப்பநிலை உயர்ந்திருந்தது. இதனால் அந்தக் காலக்கட்டத்தில் நான் பயிரிட்ட தக்காளி, மிளகாய் நல்ல விளைச்சலைத் தரவில்லை. சுமார் 3 மாதம் வருமானம் இல்லாமல் இருந்தது.
எந்தவொரு பயிரையும் பயிரிடும் முன், அதனால் ஏற்படும் இழப்புகளை நம்மால் எவ்வளவு தாங்கிக்கொள்ள முடியும் என்பதை முன்கூட்டியே திட்டமிடவேண்டியது அவசியம். காய்கறி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அடிக்கடி பம்பர் பரிசு விழும். காரணம் நல்ல தரமான காய்கறிகளுக்கு சந்தையில் எப்போதுமே தேவை இருக்கிறது. அந்தத் தேவையைப் புரிந்துகொண்டு நாம் காய்கறி பயிரிட வேண்டும். எங்கள் பகுதியில் காலிஃபிளவர் நல்ல விளைச்சல் தராது என்றார்கள். நான் அதையும் பயிரிட்டு நல்ல லாபம் பார்த்தேன். இந்த நிலத்தில் இந்த வகையான காய்கறிகள்தான் விளையும் என்று அடித்துச் சொல்ல முடியாது. பயிர் நன்கு வளரத் தேவையான சத்துகள் என்ன? நிலத்தில் என்ன சத்து இருக்கிறது என ஆய்வு செய்து அதற்கு ஏற்ப உரம், மருந்து ஆகியவற்றைப் போட்டு பராமரிக்க வேண்டும்.
எனக்குச் சொந்தமாக 12 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அதுபோக 10 ஏக்கர் கோயில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து அதில் விவசாயம் செய்து வருகிறேன். சுமார் 22 ஏக்கரில் வெள்ளரி, வாழை, கத்தரி, புடலை, கடலை உள்ளிட்டவற்றைப் பயிரிட்டிருக்கிறேன். இதில் 3000 ஆயிரம் ழைக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறேன். வாழைக்கு ஊடுபயிராக வெள்ளரி பயிரிட்டுள்ளேன். அதுபோக 1.5 ஏக்கரில் தனியாக வெள்ளரி பயிரிட்டு இருக்கிறேன். வெள்ளரி 45 முதல் 50 நாட்களில் மகசூல் தரும். புடலை 60 நாட்களில் மகசூல் தரும். மிளகாய், கத்தரி 50 நாட்களில் மகசூல் தரும். இதன் அடிப்படையில் திட்டமிட்டு செயல்பட்டால் மாதந்தோறும் விவசாயத்தில் நிலையான
வருமானத்தைப் பெற முடியும்.
என்னிடம் 12 பேர் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு வாரத்திற்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கிறேன். ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் காய்கறி விவசாயத்தில் வருமானம் எடுக்க முடிகிறது. விவசாயியைக் காப்பாற்றுவது அவன் உற்பத்தி செய்யும் பொருளுக்கு உள்ள விலைதான். விலைக்காக பருவம் தப்பியும் காய்கறிகளைப் பயிரிட முடியாது. அதனால் அந்தக் காய்கறி சீசனுக்கு சற்று முன்னரோ அல்லது பின்னரோ மகசூல் எடுக்கக்கூடிய வகையில் திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல லாபத்தைப் பெற முடியும்.
மார்க்கெட்டுக்கு அதிகம் வரக்கூடிய எந்த ஒரு பொருளுக்கும் விலை இருக்காது. ஆனால் விவசாயிகள் எந்தப் பயிர் லாபம் தருகிறதோ அதையே அனைவரும் பயிரிடுகிறார்கள். அது நல்ல பலனைத் தராது. பொதுவாக தென்மாவட்ட விவசாயிகள் பலர் சோளம் அதிகம் பயிரிடுகிறார்கள். எல்லோரும் ஒரே பொருளைக் கொடுத்தால் எந்த வியாபாரி அந்த பொருளுக்கு ஏற்ற விலையைக் கொடுப்பார்? அதனால் விவசாயிகள் மாற்றி யோசிக்க வேண்டும். வெங்காயம் இந்தப் பகுதியில் நன்கு வளரக்கூடியதுதான். ஆனால் யாரும் அதை முயற்சி செய்யவில்லை. அதே நேரத்தில் வெங்காயத்திற்கு சந்தையில் தேவை அதிகம் உள்ளது. விவசாயத்தில் வெற்றி பெற விவசாயிகள் மார்க்கெட் தேவைக்கு ஏற்ப பயிர்களைத் தேர்வு செய்து பயிரிட வேண்டும்’’ என்கிறார்.
தொடர்புக்கு
ராஜேந்திரன்: 98423 97390