புதுடெல்லி: விவசாயிகளின் வருவாய் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ரூ.13,966 கோடி மதிப்பீட்டில் 7 புதிய திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில்,விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களின் வருமானத்தை அதிகரித்து வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் ரூ.13,966 கோடி மதிப்பீட்டில் 7 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த திட்டங்கள் ஆராய்ச்சி மற்றும் கல்வி, காலநிலை மீள்தன்மை, இயற்கை வள மேலாண்மை, வேளாண் துறையில் டிஜிட்டல் மயமாக்கல், தோட்டக்கலை மற்றும் கால்நடை துறைகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும்’’ என்றார்.
இதன்படி, வேளாண் துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான டிஜிட்டல் வேளாண் இயக்கத்திற்கு ரூ.2,817 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான பயிர் அறிவியலுக்காக ரூ.3,979 கோடி, வேளாண் கல்வி, மேலாண்மை மற்றும் சமூக அறிவியலை வலுப்படுத்த ரூ.2,291 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன. நிலையான கால்நடை ஆரோக்கியம் மற்றும் பால் உற்பத்திக்காக ரூ.1,702 கோடி, தோட்டக்கலை வளர்ச்சிக்கு ரூ.1129.30 கோடி, வேளாண் அறிவியல் மையத்தை மேம்படுத்த ரூ.1,202 கோடி, இயற்கை வள மேலாண்மைக்காக ரூ.1,115 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, குஜராத்தின் சனந்த் நகரில் கெய்ன்ஸ் செமிகான் தனியார் நிறுவனத்தின் மூலம் செமிகண்டக்டர் ஆலை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.3,300 கோடி முதலீட்டில் இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதில் நாள் ஒன்றுக்கு 60 லட்சம் சிப்புகள் தயாரிக்கப்படும். மேலும், ரூ.18,036 கோடி மதிப்பீட்டில் மும்பை -இந்தூர் இடையே புதிய ரயில்பாதை திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் உள்ள 6 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டம், நாட்டின் தற்போதைய மொத்த ரயில் பாதையில் 309 கிமீ அதிகரிக்கும்.