அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே குடும்பத் தகராறில் மனைவி, 2 மகள்கள் மீது அம்மிக்கல்லை போட்டும், அரிவாளால் வெட்டியும் விவசாயி கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேல் (45), விவசாயி. இவரது மனைவி, மல்லாங்கிணறு நந்திக்குண்டுவைச் சேர்ந்த பூங்கொடி (35). இவர்களது மகள்கள் ஜெயதுர்கா (10), ஜெயலட்சுமி (7). அப்பகுதியில் உள்ள பள்ளியில் முறையே 5ம் வகுப்பு, 2ம் வகுப்பு படித்து வந்தனர். தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், ஒரு மாதத்துக்கு முன்பு, கணவருடன் கோபித்துக் கொண்டு, மகள்களை அழைத்துக் கொண்டு நந்திக்குண்டுவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு பூங்கொடி சென்றார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுந்தரவேலின் தந்தை மருமகளின் ஊருக்குச் சென்று, அவரை சமாதானம் செய்து அழைத்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி மீது கடுங்கோபத்துடன் இருந்த சுந்தரவேல், சரியாக தூங்கவில்லை என கூறப்படுகிறது. நேற்று அதிகாலை 3 மணியளவில் எழுந்த சுந்தரவேல், அருகே தூங்கி கொண்டிருந்த மனைவி மற்றும் 2 குழந்தைகள் மீது அம்மிக்கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் மனைவி, குழந்தைகள் அலறியுள்ளனர். மேலும், ஆத்திரம் தீராத சுந்தரவேல், அருகில் கிடந்த அரிவாளை எடுத்து மனைவி, மகள்களை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பின் வீட்டிலிருந்து வெளியேறிய சுந்தரவேல், நேற்று காலை அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் சரணடைந்து, 3 பேரையும் வெட்டி கொலை செய்துவிட்டதாக கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த மூவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த வீட்டை எஸ்பி கண்ணன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
ஆண் குழந்தை பெற்று தராததால் டார்ச்சர்
அருப்புக்கோட்டை தாலுகா போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சுந்தரவேல், கடந்த பிப்ரவரியில் சொந்த ஊர் திரும்பி விவசாயம் செய்து வந்துள்ளார். மனைவியிடம், ‘2 மகள்களை பெற்று விட்டாய். ஒரு ஆண் குழந்தை பெற்றுத் தரவில்லையே’ எனக்கூறி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் பூங்கொடி, கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 9ம் தேதி, அங்கு சென்ற சுந்தரவேல், பூங்கொடியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, மீண்டும் குழந்தை பிரச்னையை கூறி தகராறு செய்ததோடு, வேலைக்கு சென்று சம்பாதித்து தராவிட்டால் 3 பேரையும் கொன்று விடுவதாகவும் மிரட்டியதாக தெரிய வந்துள்ளது.