விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழிக்க பலரும் திட்டமிடுவது சுற்றுலாவாகத்தான் இருக்கும். அதிலும் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பித்து குளிர்ச்சியான இடங்களைத் தேடி பயணத்தை வகுத்துக் கொள்வார்கள். மே மாதத்தில் அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் மொய்த்துக் கிடப்பார்கள் என்பதால் அதைத் தவிர்த்து மற்ற சமயங்களில் சுற்றுலாவைத் திட்டமிடுகிறவர்களும் உண்டு. அதுபோன்றவர்களுக்கு அற்புதமான சுற்றுலா வடிவம் ஒன்று இருக்கிறது. அதன்பெயர் பண்ணைச் சுற்றுலா. இந்த சுற்றுலா நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், நமக்கு ஒரு பயனுள்ள நிகழ்வாக மாறவே அதிக வாய்ப்பு. இந்த சுற்றுலாவின் மூலம் இயற்கையோடு இணைந்திருக்கும் வாழ்க்கை முறைகள் நமது உடலையும், மனதையும் எப்படி ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன என்பதைக் கண்கூடாக அறியலாம். ஆனால் இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறை இயற்கையை நம்மிடம் இருந்து வெகு தூரத்திற்கு விலக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இயற்கையையும், விவசாயத்தையும் மீண்டும் நமக்கு அருகில் கொண்டு வர `பண்ணைச் சுற்றுலா’ ஒரு அருமையான அம்சம்.
விவசாய நிலங்கள் மற்றும் கிராமப்புறச் சூழல்களை மையமாகக் கொண்ட ஒரு சுற்றுலா வடிவம்தான் பண்ணைச் சுற்றுலா. இதில் பங்கேற்கும் சுற்றுலாப் பயணிகள் விவசாய நிலங்களை நேரடியாக பார்வையிடுவார்கள். விதை விதைக்கும் முறைகளை நாம் அருகில் இருந்து பார்த்து ரசிக்கலாம். அறுவடைப் பணிகளில் உழவர்களோடு நாமும் இணைந்து பங்கேற்கலாம். கால்நடைப் பராமரிப்பு குறித்து அறியலாம். சில இடங்களில் மாட்டு வண்டி, கட்டை வண்டிகளில் நம்மை வயல்களைச் சுற்றிக் காண்பிக்கிறார்கள். தமிழகத்தில் கோயம்புத்தூர், ஊட்டி, பொள்ளாச்சி மற்றும் ஈரோடு போன்ற இடங்களில் தற்போது பல பண்ணைச் சுற்றுலா மையங்கள் உருவாகி வருகின்றன. சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளிலும் பண்ணைச் சுற்றுலா மையங்கள் பெருகி வருகின்றன. இவை சுற்றுலா மையமாக செயல்படுகின்றன என்பதை விட, விவசாயத்தின் மீதான மக்களின் ஈர்ப்பை அதிகரிக்கச் செய்கின்றன என்பதே சரியான உண்மை.
நாம் தினசரி உண்ணும் உணவின் மூலமானது எங்கிருந்து வருகிறது என்பதை நமது பிள்ளைகள் தெரிந்துகொள்ள வேண்டுமானால், இத்தகைய பண்ணைச் சுற்றுலா பயணங்கள் மிகவும் அவசியமாகின்றன. விவசாயம் மற்றும் விவசாயிகளின் உழைப்பு நமது வாழ்வில் எப்படி இரண்டறக் கலந்திருக்கின்றன என்பதை நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்கூற இதுபோன்ற சுற்றுலாக்களை ஊக்கப்படுத்துவதே சிறந்த வழி!