வேளச்சேரி: வேளச்சேரி தண்டீஸ்வரம் நகர் மெயின் சாலையில் ஒரு பேன்சி ஸ்டோர் உள்ளது. இன்று காலை 10 மணியளவில் ஊழியர்கள் வழக்கம் போல கடையை திறந்தனர். முதல் தளத்தில் உள்ள ஷட்டரை திறந்தபோது தீ எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். உடனே ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர். இதற்கிடையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவான்மியூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை, மேடவாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகளவில் புகை வந்து கொண்டிருப்பதால் தீயை கட்டுப்படுத்துவதில் சற்று சிரமம் ஏற்பட்டது. இதனால் சுற்று வட்டார பகுதியில் குடியிருப்பவர்கள் கண் எரிச்சலால் அவதிப்பட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் குறித்து வேளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.