சென்னை: சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள பிரபல மாலுக்கு, நேற்று மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், உங்களது மாலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் வெடித்து சிதறும், என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், 30க்கும் மேற்பட்ட மோப்பநாய் பிரிவு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு வந்து, தீவிர சோதனை நடத்தினர்.
முன்னதாக, அங்கிருந்து பொதுமக்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். நீண்ட நேர சோதனைக்கு பிறகு, அங்கு வெடிகுண்டு ஏதும் இல்லை என்பதும், இது வெறும் மிரட்டல் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மின்னஞ்சல் முகவரியை வைத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். விடுமுறை தினம் என்பதால், இந்த மாலில் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டலால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.