திருவனந்தபுரம்: பிரபல பழம்பெரும் மலையாள நடிகர் குண்டரா ஜோனி காரில் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார். பழம்பெரும் மலையாள நடிகர் குண்டரா ஜோனி (71). இவரது சொந்த ஊர் கொல்லம் மாவட்டம் குண்டரா ஆகும். 1979ல் அக்னிபர்வதம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். வில்லன் கதாபாத்திரம் ஏற்று சிறப்பாக நடித்து வந்த அவர் கிரீடம், செங்கோல், நாடோடிக்காற்று, ஹலோ உள்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கடந்த வருடம் வெளியான மேப்படியான் என்ற படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் குண்டரா ஜோனி நடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு அவர் கொல்லம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து கொல்லத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இரவு 10 மணியளவில் மரணமடைந்தார். மாரடைப்பு ஏற்பட்டதுதான் மரணத்திற்கு காரணம் என்று டாக்டர்கள் கூறினர். வில்லன் நடிகர் குண்டரா ஜோனி மரணமடைந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் திரைப்பட உலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.