*நேர்ச்சையாக கடலில் பிளாப்பெட்டிகளில் மணல் எடுத்த பக்தர்கள்
திசையன்விளை : உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலங்களில் நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் ஒன்று.
சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, கடற்கரையில் அமைந்த இக்கோயிலில் சுவாமி சுயம்பு லிங்கமாக தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வரலாற்றை நினைவு கூரும் வகையில் பக்தர்கள் நேர்ச்சையாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் கடலில் பிளாப்பெட்டிகளில் மணல் எடுத்து, அதனை தலையில் சுமந்து கரையில் சேர்ப்பார்கள்.
இத்தகைய நேர்ச்சை தமிழ்நாட்டில் இங்கு மட்டுமே நடைபெறுகிறது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் மூலவரை சூரிய கதிர்கள் அபிஷேகம் செய்யும் அபூர்வ நிகழ்வு இங்கு நடைபெற்று வருகிறது.
பல்வேறு சிறப்பு மிக்க இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று முன்தினம் (ஜூன் 8) துவங்கி 2 நாட்கள் நடந்தது. முதல் நாளான நேற்று முன்தினம் காலையில் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளும், மாலையில் பரதநாட்டியம் மற்றும் சொற்பொழிவும் நடந்தது. இரண்டாவது நாளான நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட சிறப்பு பூஜை மற்றும் உச்சிக்கால சிறப்பு பூஜையும் நடந்தது.
காலை முதல் மாலை வரை பெரியபுராண சிந்தனை அரங்க திருக்கூட்டம் சார்பில் இருளப்பபுரம் சிவஆனந்தி ரமேஷ் தலைமையில் திருவாசக முற்றோதுதல் நடந்தது. காலை முதல் மாலை வரை கோயில் சார்பில் சிறப்பு அன்னதானம் நடந்தது.
கோயில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு அன்னதானத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த வியாபாரிகள் சங்க மாநில இணை செயலாளர் தங்கையா கணேசன், ராதாபுரம் ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், முன்னாள் லயன்ஸ் கவர்னர் சுயம்புராஜன், நவ்வலடி சரவணகுமார், முத்து, பொன்இசக்கி, ராஜன், அமிர்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலை பக்தராய் பணிவார்கள் எழில் ஞான மன்றம் தலைவர் டாக்டர் திருஞானசம்பந்தன் தலைமையில் தேவார இன்னிசை கச்சேரியும், சமய பொற்பொழிவும் நடந்தது. இரவு 1 மணிக்கு சுவாமி வீதி உலா வருதல், வாணவேடிக்கை, மகர மீனுக்கு காட்சி கொடுத்தல் நடந்தது. விழாவிற்கு பல்வேறு ஊர்களில் இருந்து அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
விழாவில் கலந்த கொண்ட பக்தர்கள் நேர்ச்சையாக பிளாப்பெட்டிகளில் கடலில் இருந்து மணல் எடுத்து கரையில் கொட்டினர். தொடர்ந்து கடலிலும், தெப்பகுளத்திலும் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். கடலில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கடலோர பாதுகாப்பு காவலர்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கடலில் ஆழமான பகுதிக்குள் பக்தர்கள் செல்லாதவாறு கடலின் குறிப்பிட்ட பகுதியில் தடுப்பு கயிறுகள் கட்டியிருந்தனர். அத்துடன் ஒலிபெருக்கி மூலம் பக்தர்களை எச்சரித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளியூர் டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில் உவரி இன்ஸ்பெக்டர் எழில் துரைசிங் செய்திருந்தார். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.