திருவொற்றியூர்: வீட்டின் கதவை திறந்து பிரபல ரவுடியை வெட்டிக்கொலை செய்துள்ளது திருவொற்றியூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுசம்பந்தமாக சந்தேகத்தின்படி 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவொற்றியூர் வடக்கு ரயில்வே சாலையை சேர்ந்தவர் ஜெயா. இவர் வீட்டு வேலை செய்து வருகிறார்.
இவரது மகன் ஆகாஷ்குமார் என்ற குள்ளப்பேட்டா (22). பிரபல ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.நேற்றிரவு ஜெயா, மளிகை பொருட்கள் வாங்குவதற்காக மகனை வீட்டின் உள்ளே உட்காரவைத்துவிட்டு கதவை பூட்டி சாவியை பக்கத்தில் மறைத்துவைத்து விட்டு சென்றுள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த 3 பேர் இதை நோட்டமிட்டு ஜெயா சென்றதும் அவர்கள் சென்று பக்கத்து வீடுகளில் முகவரி கேட்பதுபோல் விசாரித்துள்ளனர்.
இதன்பிறகு நைசாக சென்று சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே தூங்கிக்கொண்டிருந்த ஆகாஷ்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு சென்றுவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆகாஷ்குமார் பரிதாபமாக இறந்து கிடந்தார். இதனிடையே கடையில் இருந்து திரும்பிய தாய், மகன் ரத்தவெள்ளத்தில் இறந்துகிடப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிஷ் தலைமையில் போலீசார் சென்று ஆகாஷ்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுசம்பந்தமாக வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இதில், ஆகாஷ்குமார் சுற்றுவட்டாரத்தில் உள்ள வாலிபர்களை கத்தியை காட்டி மிரட்டிவந்துள்ளார்.
இதன்காரணமாக பாதிக்கப்பட்ட வாலிபர்களுக்கும் ஆகாஷ்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. கடந்த 2 மாதத்துக்கு முன் புது வண்ணாரப்பேட்டையில் நடந்து சென்றவரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி வழிப்பறி செய்துள்ளார். அப்போது இந்த வழக்கில் போலீசார் தேடி சென்றபோது தப்பியோடி ஆகாஷ்குமாருக்கு கால் உடைந்தது. சிகிச்சை பெற்ற பின்னர் ஆகாஷ்குமாரை புழல் சிறையில் அடைத்தனர்.
கடந்த மாதம் 22ம் தேதி ஜாமீனில் வந்த அவர் காலில் அடிபட்ட காயம் காரணமாக சரியாக நடக்கமுடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். எதிரிகளால் ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக தாய் ஜெயா எங்கு சென்றாலும் மகனை வீட்டில் வைத்து பூட்டிவிட்டுத்தான் செல்வாராம். இதை பல நாட்கள் நோட்டமிட்ட ஒரு கும்பல்தான், ஆகாஷ்குமாரை கொலை செய்துள்ளது.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வுசெய்து அதே பகுதியை சேர்ந்த 5 பேரை காவல்நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவல்படி, சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த பகுதியில் திருமணமான ஒரு பெண்ணை ஆகாஷ்குமார் அடிக்கடி கேலி, கிண்டல் செய்து வந்துள்ளார். இதன்காரணமாக ஆகாஷ்குமார் கொலை செய்யப்பட்டாரா, வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.