சென்னை: சென்னையில் பிரபல நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலியாக பெருங்காயம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை அறிவுசார் சொத்துரிமைகள் அமலாக்க துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை சூளைமேட்டில் பெருங்காயம் தயாரிப்பில் பிரபல தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. சமீப காலமாக இந்த நிறுவனத்தின் பெருங்காயம் போலியாக தயாரித்து கொருக்குப்பேட்டை, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் மேலாளர் குமரவேல் அயனாவரத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகள் அமலாக்க பிரிவில் புகார் அளித்தார். விசாரணையில், கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் போலியாக பெருங்காயம் தயாரித்து விற்பனை செய்வது தெரிந்தது.
அதன்பேரில், அறிவுசார் சொத்துரிமைகள் அமலாக்க துறையினர் கொடுங்கையூரில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு போலி பெருங்காயம் தயாரித்து சந்தைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சீனிவாசன், மணி மற்றும் மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலியாக தயார் செய்த அட்டைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், லேபிள்கள், பேக்கிங் இயந்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.