விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் 2 குழந்தைகளை வெட்டிக் கொன்றுவிட்டு கணவர் சுந்தரவேலு காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேலுவுக்கு பூங்கொடி என்ற மனைவியும், ஜெயதுர்கா(10), ஜெயலெட்சுமி(7) என 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை குடும்ப பிரச்சினை காரணமாக சுந்தரவேலு தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றார். இதையடுத்து அவர் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று, தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை வெட்டிக்கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்தார்.
இதனை கேட்டு அதிர்ந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது சுந்தரவேலுவின் மனைவி மற்றும் 2 குழந்தைகளும் வீட்டில் பிணமாக கிடந்தனர். பின்னர் கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி கண்ணன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவியையும், தனது குழந்தைகளையும் வெட்டிக்கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.