திருத்துறைப்பூண்டி, நவ.15: திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சீனி மற்றும் மண்ணெண்ணெய் போன்ற அத்யாவசிய பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. பொருட்கள் ரேஷன் கடையில் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக வழங்கப்படுவதை தமிழக அரசு மாவட்ட வட்ட வழங்கல் துறை மூலம் நேரடியாக கண்காணித்து வருகிறது. தற்போது மழைக்காலமாக இருந்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் சமையல் செய்யத் தேவையான விறகு அடுப்பு பற்ற வைக்க காய்ந்த விறகுகளோ, சவுக்கு கரிகளோ கிடைக்கவில்லை. அதனை பற்ற வைக்க மண்ணெண்ணையும் கிடைக்கவில்லை.
ஏழை மக்களுக்கு இலவச சிலிண்டர் காஸ் ஏஜென்சிகள் மூலம் வழங்கப்பட்டு வந்தாலும் ஒரு சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்பதால் பொது மக்களால் சிலிண்டர்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விறகு மற்றும் கரிகள் மூலம் அடுப்பை மூட்டுவதற்கு மண்ணெண்ணெய் அதிகமாக தேவையாக உள்ளது. மேலும் மழைக்காலத்தில் மழை பெய்யும் பொழுது காற்று அதிகமாக வீசும் பொழுதும்,மின்வாரிய துறை பொதுமக்கள் பாதுகாப்புக்காக மின் இணைப்பை துண்டிக்க வேண்டியுள்ளது.இது போல் இரவிலும் மின் இணைப்பை துண்டிக்கப்படுவதால் மண்ணெண்ணெய் மூலம் எரியும் சிமினி விளக்குகளை ஏழை பொதுமக்கள் அதிகமாக உபயோகப்படுத்த வேண்டி உள்ளது. ஆனால் ரேஷன் பொருட்கள் விநியோக கடையில் மத்திய அரசால் வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவு மிகவும் குறைவாக உள்ளதால் மாதம் 250 மில்லி லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு பொதுமக்களுக்கு போதுமானதாக இருக்கவில்லை. மண்ணெண்ணெய் கிடைக்க படாமல் பொதுமக்கள் கள்ள சந்தையில் மண்ணெண்ணெய் லிட்டர் ரூ.100க்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் ஏழை பொதுமக்கள் அரசு விலையை விட நான்கு மடங்கு அதிக ரூபாய் கொடுத்து மண்ணெண்ணெய் வாங்க நேரிடுவதால் பொருளாதார ரீதியாக மக்கள் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இது சம்பந்தமாக. பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் பெருமக்களிடமிருந்து குடும்ப ரேஷன் கார்டுகளுக்கு கூடுதலாக மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத்திற்கு கோரிக்கை வந்துள்ளது. ஆதலால் தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு மத்திய அரசிடம் இருந்து கூடுதல் அளவு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு பெற்று பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 2 லிட்டர் மண்ணெண்ணெய் கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.