வேலூர்: வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பாமக சார்பில் கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட பொதுக்குழு கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர்கள் ஜெகன், ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர்கள் பி.கே.வெங்கடேசன், கு.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பாமக தலைவர் அன்புமணி பங்கேற்று பேசியதாவது: வரும் ஜூலை 25 ராமதாஸ் பிறந்தநாளில் இருந்து பசுமை தாயகம் சார்பில் 100 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளப்படும். குடும்ப பிரச்னைகள், வெளியே சொல்ல முடியாத அளவிற்கு மனதிற்குள் ஏராளமாக உள்ளது. நீறுபூத்த நெருப்பாக, காலப்போக்கில் அதுவே தானாக சரியாகிவிடும். பாமகவை பிளவுபடுத்த நினைக்கும் சூழ்ச்சியாளர்களுக்கு காலம் பதில் சொல்லும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில், வேலூர் மாநகரச் சாலைகளை சரி செய்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.பள்ளிகொண்டா பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* பாலாற்றில் தடுப்பணைக்காக நடைப்பயணம்
அன்புமணி பேசுகையில், ‘வேலூரில் உள்ள மலைப்பகுதியை சுற்றி சுமார் 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வெயில் அளவு குறைக்க பசுமை தாயகம் சார்பில் மர கன்றுகளை நட அனுமதி வழங்க வேண்டும். பாலாற்றில் தடுப்பணை கட்டி விவசாயம் காக்க புல்லூரிலிருந்து சதுரங்கபட்டினம் வரை நடைபயணம் மேற்கொள்ளப்போகிறேன். ஏற்கனவே 1996ம் ஆண்டு பாலாற்றை காக்க மருத்துவர் ராமதாஸ் வாணியம்பாடியிலிருந்து வாலாஜா வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்’ என்று தெரிவித்தார்.
* திசை திருப்புகிறார் அன்புமணி பாமக நிர்வாகி குற்றச்சாட்டு
பாமக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் சதாசிவம் சமூகவலைதளத்தில் விடுத்துள்ள பதிவு: பாமகவில் தனி அணியாக செயல்பட்டு வரும் அன்புமணி, மாவட்ட கூட்டங்களில் கட்சிக்குள் நடக்கும் பிரச்னைகளுக்கு திமுக தான் காரணம், சூழ்ச்சியாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். பாமகவில் 35 ஆண்டுகளாக பயணித்தும் கட்சி நிர்வாகியாக இப்போதைய நிலையை அறிந்தவனாகவும் உள்ள எனக்கு கட்சிக்கு வெளியில் இருந்து இந்த உட்கட்சி பூசலை அதாவது தந்தைக்கும் மகனுக்குமான கருத்து வேறுபாடுகளை, வேறு யாரும் இயக்கிக் கொண்டிருப்பதாக சொல்வதை ஏற்க இயலவில்லை.
இதனை ராமதாஸ் சென்ற மாதம் ஒன்றரை மணி நேரம் அளித்த பேட்டியில் எங்கும் குறிப்பிடவில்லை. அதற்கு பின்னர் அன்புமணி, ராமதாசை சந்தித்து பேசி இருக்கிறார். பலர் சமாதானப்படுத்தி இருக்கிறார்கள். சமாதான, சமரச முயற்சியில் ஈடுபட்ட யாரும் இப்படி ஒரு சூழ்ச்சி நடக்கிறது என்றோ கட்சிக்கு வெளியில் இருந்து யாரோ இதை தூண்டுகிறார்கள் என்றோ சொல்லவில்லை என்பது தெளிவாகிறது. அப்படி இருக்கையில் எப்படி இந்த கருத்தை அன்புமணி சொல்லி இருக்கிறார். ஒரு வேளை பிரச்னையை திசை திருப்ப நினைக்கிறாரோ என எண்ண வேண்டி உள்ளது.இவ்வாறு கூறியுள்ளார்.