*தி.மலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது, அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன், ஆர்டிஓ ராஜ்குமார், மாவட்ட மறுவாழ்வு அலுவலர் செந்தில்குமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள், கலைஞரின் வீடு வழங்கும் திட்டம், சாலை வசதி, குடிநீர் வசதி, தாட்கோ கடனுதவி, பயிர் கடன் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 387 பேர் மனு அளித்தனர்.
பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது, விரைந்து நடவடிக்கை எடுத்து தேர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதோடு, கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
மேலும், கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மனு அளிக்க காத்திருந்த மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கலெக்டர் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார். அப்போது, உதவி உபகரணங்கள் கோரும் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண உத்தரவிட்டார்.
இந்நிலையில், தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு மகன்களுடன் மனு அளிக்க வந்திருந்தார். அப்போது, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் திடீரென மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு மகன்களுடன் சேர்ந்து தீக்குளிக்க முயன்றார்.
அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.உடனடியாக, அங்கிருந்த போலீசார் விரைந்துச்சென்று தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். அதைத்தொடர்ந்து, விசாரணைக்காக திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர்.
விசாரணையில், குடும்ப பிரச்சனை காரணமாக தன்னுடைய கணவர் தகராறு செய்வதால் தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார். தீக்குளிக்க முயற்சிப்பது சட்டவிரோத செயல் என எச்சரித்து அனுப்பினர்.
மேலும், திருவண்ணாமலை தீபமலையில் நிலச்சரிவினால் வீடுகளை இழந்தவர்களுக்கு தற்போது தற்காலிக வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்களுக்கு நிரந்தமாக வீடுகள் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.