பரிதாபாத்: அரியானாவில் சாக்கடை கால்வாய் அமைப்பதாக கூறி மருமகளை கொன்று ெதருவில் 10 அடி குழிதோண்டி புதைத்த கணவர், மாமனார், மாமியார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அரியானா மாநிலம் பரிதாபாத்தைச் சேர்ந்த அருண்சிங்(28) என்பவருக்கும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தனு (24) என்பவருக்கும் கடந்த 2023ல் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன சில மாதங்களிலேயே, தனுவின் கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினர் நகைகள் மற்றும் பணம் கேட்டு வரதட்சணைக் கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அவர்களின் கொடுமை தாங்காமல், தனு தனது தாய் வீட்டிற்குத் திரும்பி வந்து ஓராண்டுக்கு மேல் தங்கியிருந்தார். பின்னர் மீண்டும் கணவர் வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில், கொடுமைகள் தொடர்ந்தன.
அவரைத் தொலைபேசியில் கூட குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கவில்லை. கடந்த ஏப்ரல் 23ம் தேதி, தனு வீட்டை விட்டு ஓடிவிட்டதாக அவரது மாமியார் வீட்டார், தனுவின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், ஏப்ரல் 9ம் தேதியே தனது சகோதரியுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் சந்தேகம் அடைந்த தனுவின் சகோதரி பிரீத்தி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், பரிதாபாத்தில் உள்ள தனுவின் கணவர் வீட்டிற்கு அருகே உள்ள தெருவில், 10 அடி ஆழமுள்ள குழியிலிருந்து அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. சமீபத்தில் கான்கிரீட் போட்டு மூடப்பட்டிருந்த அந்த இடத்திலிருந்து, ஜேசிபி இயந்திரம் மூலம் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக தனுவின் கணவர் அருண் சிங், மாமனார் பூப் சிங்(50), மாமியார் மற்றும் மற்றொரு உறவினர் என நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட உடல், மரணத்திற்கான நேரம் மற்றும் காரணத்தைக் கண்டறிய தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.