புதுடெல்லி: போலி வாக்காளர் அட்டை பிரச்னை அடுத்த 3 மாதத்தில் தீர்க்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு, ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மோசடி நடப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா குற்றம் சாட்டியிருந்தார். அங்கு அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கூறும்போது,’ மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண், குஜராத், அரியானாவில் உள்ள வாக்காளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலி வாக்காளர்களை உருவாக்கி, இங்கு தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.,வுக்கு தேர்தல் கமிஷன் உதவுகிறது.
மகாராஷ்டிரா, டெல்லியில் உள்ள கட்சிகள் இதை கண்டுபிடிக்கவில்லை. அங்கு நடந்த சட்டப்பேரவை தேர்தல்களிலும் பா.ஜ., இப்படித்தான் போலி அடையாள அட்டை வாயிலாக வென்றுள்ளது. மேற்கு வங்கத்தில் அதுபோல் மோசடி செய்ய விட மாட்டோம்’ என்றார். இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் நேற்று விளக்கம் அளித்துள்ளது. அதில் பல ஆண்டுகளாக உள்ள போலி வாக்காளர் அட்டை பிரச்சினைக்கு அடுத்த 3 மாதங்களில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில்,’ 99 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவின் வாக்காளர் பட்டியல்கள் உலகெங்கிலும் உள்ள வாக்காளர்களின் மிகப்பெரிய தரவுத்தளமாக உள்ளது.
நகல் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) எண்கள் விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையம் ஏற்கனவே இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்துள்ளது. இபிஐசி எண்ணைப் பொருட்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட வாக்குச் சாவடியின் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வாக்காளர் அந்த வாக்குச் சாவடியில் மட்டுமே வாக்களிக்க முடியும், வேறு எங்கும் இல்லை. இருப்பினும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த சிக்கலை அடுத்த மூன்று மாதங்களில் தீர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய முறை வருங்கால வாக்காளர்களுக்கும் பொருந்தும்’ என்று தெரிவித்துள்ளது.
* குற்றத்தை இறுதியாக ஒப்புக்கொண்டுள்ளது
தேர்தல் ஆணையம் இறுதியாக குற்றத்தை ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொண்டது என்று திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் மாநிலங்களவை எம்பி சாகேத் கோகலே வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ பல நபர்களுக்கு போலி இபிஐசி எண்கள்(தேர்தல் புகைப்பட அடையாள அட்டை) ஒதுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் இறுதியாக ஒப்புக்கொண்டு, அவர்களின் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. முதல்வர் மம்தா தான் இதை அம்பலப்படுத்தி உள்ளார்’ என்றார்.
* காங்கிரஸ் ஆலோசனை
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதியில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் திங்கட்கிழமை மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்தில் போலி வாக்காளர் அட்டை பிரச்னையை அவையில் எழுப்புவது குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் வக்பு சட்டத்திருத்த மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதை எதிப்பது குறித்தும் காங்கிரஸ் முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* நாடாளுமன்றத்தில் விவாதிக்க நோட்டீஸ்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி வரும் 10ம் தேதி தொடங்கி ஏப்.4 வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் போலி வாக்காளர் அடையாள எண் பிரச்சினை எழுப்பப்பட உள்ளது. இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இந்த விவகாரம் குறித்து சபையில் விவாதிக்கக் கோரி நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளனர்.