புதுடெல்லி: ஆந்திராவில் வாக்காளர் பட்டியலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 40 லட்சம் போலி வாக்கார்களை சேர்த்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இதுதொடர்பாக, அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நேற்று டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் நேரில் சென்று முறையிட்டார். இதுதொடர்பாக அவர் அளித்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: ஆந்திராவில் தகுதியான வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதோடு, இறந்த வாக்காளர்கள் மற்றும் போலி வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்குவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். வாக்காளர்களின் தகவல்கள் மற்றும் ஆதார் எண்கள் தனியார் நிறுவனத்திற்கு தரப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க வேண்டும். தேர்தல் தொடர்பான பணிகளில் ஆசிரியர்கள், பிற துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். எதிர்க்கட்சியினரை தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்க ஆளுங்கட்சியினர் பல்வேறு பொய் வழக்குகளை போடுகின்றனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.