மதுரை: போலி மருத்துவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. போலி பட்டயப் படிப்பு சான்றிதழ்களை வைத்து மக்கள் உயிருடன் விளையாடுகின்றனர். எலக்ட்ரோ ஹோமியோபதி மெடிசன் டிப்ளமோ சான்றிதழை வைத்து மருத்துவம் பார்க்க முடியாது. சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று நீதிபதி முரளிசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்காசியில் அமிர்தராஜ் என்பவர் சூர்யா மருத்துவமனை நடத்தி வருகிறார். கொரோன காலத்தில் இவர் மருத்துவமனையில் சுகாதாரத்துறை ஆய்வு நடத்தினார். பின்னர் ஆய்வில் மருத்துவமனை சுகாதாரமாக இல்லை என்று அபராதம் விதித்துள்ளனர். அந்த அபாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் எலக்ட்ரோ ஹோமியோபதி டிப்ளமோ படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்த்துள்ளார். இது ஏற்புடையதல்ல என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இதனையடுத்து போலி மருத்துவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மேலும் போலி மருத்துவர்கள் சமூகத்துக்கு ஆபத்தானவர்கள். இது போல மருத்துவர்கள் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.