கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, போசப்பன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (39). தெருக்கூத்து நாடக கலைஞர். இவருக்கும், வேப்பனஹள்ளி அருகே தடத்தாரை அடுத்த ஜி.ஆர்.போடூர் கிராமத்தை சேர்ந்த சின்னநரசிம்மன் (50) என்பவரது மனைவி பையம்மாளுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை சின்னநரசிம்மன் கண்டித்தும் கைவிடவில்லை. இந்நிலையில், நேற்று மதியம் 2.30 மணி அளவில், கிருஷ்ணகிரியில் 5 ரோடு ரவுண்டானா அருகில் வெங்கடேசனும், பையம்மாளும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த சின்னநரசிம்மன் டூவீலரில் தப்ப முயன்ற வெங்கடேசனை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில், அவர் கழுத்து, தலை, முகம் உள்பட பல இடங்களில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சின்னநரசிம்மனை சுற்றிவளைத்து பிடித்தனர். இதற்கிடையே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வெங்கடேசன் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் சின்னநரசிம்மனை கைது செய்தனர்.