சென்னை: கொழும்பில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் சென்னை அரும்பாக்கம் முகவரியில் வசிக்கும் 48 வயது பெண், மற்றும் 21 வயது இளம்பெண் ஆகியோர், இந்திய பாஸ்போர்ட்களில் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக சென்று விட்டு, திரும்பி வந்தனர். குடியுரிமை அதிகாரிகளுக்கு அந்த பெண்கள் இருவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. இருவரும் இலங்கையைச் சேர்ந்த தாய், மகள் என்று தெரியவந்தது. இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சென்னையில் குடியேறி உள்ளனர். அதன் பின்பு அவர்கள் போலி ஆவணங்கள் மூலம், இந்திய பாஸ்போர்ட்டுகள் வாங்கியதாக தெரிகிறது.
இதையடுத்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், இலங்கை பெண்கள் இருவரும் போலி ஆவணங்களை கொடுத்து ஏஜென்ட்கள் மூலம் போலி பாஸ்போர்ட்டுகள் பெற்று, அதை பயன்படுத்தியதாக இருவரையும் கைது செய்தனர். அதோடு இவர்களுக்கு போலி பாஸ்போர்ட்டுகளை வாங்கிக் கொடுத்த ஏஜென்ட்டுகள் யார், அதற்காக ஏஜென்ட்டுகள் எவ்வளவு பணம் பெற்றனர் என்பது குறித்தும், இரவு முழுவதும் இரு பெண்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதோடு போலி பாஸ்போர்ட்டுகளில் கைதான, இலங்கையைச் சேர்ந்த தாய், மகள் இருவரையும், மேல் நடவடிக்கைக்காக சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்க குடியுரிமை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில்,போலி பாஸ்போர்ட்டுகளில் இலங்கையில் இருந்து, விமானத்தில் சென்னைக்கு வந்த, தாய் மகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.