திருத்தணி: திருத்தணி அருகே வரி செலுத்தாமல் போலி நெம்பர் பிளேட் பயன்படுத்தி இயக்கிய ஆந்திர டூரிஸ்ட் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. திருத்தணி அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள பொன்பாடி சோதனை சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுமேஷ் நாராயணன் நேற்றுமுன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது. ஆந்திராவிலிருந்து திருத்தணி நோக்கி வந்த ஆந்திர மாநில டூரிஸ்ட் வாகனம், சோதனை சாவடியில் நிறுத்தாமல் வேகமாக சென்று விட்டது.
இதனை தொடர்ந்து, மேற்கண்ட வாகனத்தை துரத்திச் சென்று திருத்தணி அருகே முருக்கம்பட்டு என்ற இடத்தில் வைத்து வாகனத்தை மடக்கி பிடித்தனர். பின்னர், ஆவணங்களை சோதனை செய்ததில், தமிழ்நாடு அரசுக்கு வரி செலுத்தாமல், பர்மிட் பெறாமல், போலியாக நம்பர் பிளேட்டை தயார் செய்து இயக்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில், மேற்கண்ட வாகனத்தை இணை போக்குவரத்து ஆணையர் சுரேஷ் அறிவுரையின்படி திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.