புதுடெல்லி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் என்சிசி பயிற்சி முகாம் நடந்தது. இதில் 17 மாணவிகள் கலந்துகொண்ட நிலையில், அவர்கள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர். இதையடுத்து அப்போது தூங்கிக்கொண்டிருந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பயிற்றுநரான காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன், பள்ளியின் முதல்வர், சமூக அறிவியல் ஆசிரியர், தாளாளர் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அனுமதி இல்லாமல் சிவராமன் போலியாக என்.சி.சி முகாம் நடத்தியது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக காவல்துறை புலனாய்வு ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சிவராமன் தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவர் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். அதேபோன்று அவரது தந்தையும் சாலை விபத்தில் பலியானர். இதையடுத்து இந்த விவகாரத்தை வழக்காக தாக்கல் செய்தால் அதனை விசாரிக்க தயார் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு, சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் என்.எஸ்.ரேவதி அவசர கடிதம் ஒன்ற எழுதியுள்ளார். அதில், ‘‘கிருஷ்ணகிரியில் போலியாக என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஒரு உரிய உத்தரவை பிறபிக்க வேண்டும்.
மேலும் இந்த விவகாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு, கொல்கத்தா பயிற்சி மருத்துவர் வழக்கை விசாரித்தது போன்று, இந்த விவகாரத்தையும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். விசாரணை சரியான கோணத்தில் நடக்கிறதா என்றும் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றம் ஒரு முடிவை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.