உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கொங்கல்நகரம் பகுதியைச் சேர்ந்தவர் சபரீஸ்வரன் (35). கட்டிடத் தொழிலாளியான இவர் திருமணமாகி மனைவியை பிரிந்தவர். தாய் மற்றும் பாட்டியுடன் கொங்கல் நகரத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை வீட்டிற்குள் வெட்டுக்காயங்களுடன் பிணமாகக் கிடந்தார். குடிமங்கலம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கள்ளக்காதல் தகராறில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. சபரீஸ்வரனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அந்த பெண்ணுடன் முக்கூடல் ஜல்லிப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான பாலு என்ற பாலமுருகனும் தொடர்பில் இருந்துள்ளார். கள்ளக்காதல் போட்டியில் சபரீஸ்வரனுக்கும் பாலமுருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சபரீஸ்வரன் கதவு இல்லாத தனது வீட்டில் படுத்து தூங்கிகொண்டிருந்தார். நள்ளிரவில் பாலமுருகன் 5 பேர் கும்பலுடன் அங்கு வந்து சபரீஸ்வரனை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். தப்பியோடிய பாலமுருகன் மற்றும் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்காதல் போட்டியில் கட்டிடத்தொழிலாளி வெட்டிக்கொலை
0