கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காந்திகுப்பம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை தேசிய மாணவர் படையான என்சிசியின் சிறப்பு முகாம் நடைபெற்றிருக்கிறது. இந்த முகாமில் அதே பள்ளியில் படிக்கும் மாணவிகள் அங்கே தங்கி பயிற்சி பெற்று இருக்கின்றனர். இந்நிலையில் அந்த முகாமின் பயிற்சியாளரும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான சிவராமன் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை அதிகாலையில் தனியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் படிப்பு போய்விடும் என அந்த மாணவியை சிவராமன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதை அடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த மாணவி பள்ளியின் தாளாளர் சாம்சனிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இதனை வெளியில் சொல்ல வேண்டாம் என பள்ளி நிர்வாகம் மாணவியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து வீட்டுக்குச் சென்ற அந்த மாணவி மிகவும் சோர்வாக இருந்துள்ளார். அதோடு அவருக்கு உடல் நல குறைவும் ஏற்பட்டிருக்கிறது. இதை அடுத்து மாணவியின் பெற்றோர் அவரை அழைத்து பேசியபோது தன்னை சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்ததை கூறி இருக்கிறார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் சிவராமன் தலைமுறைவானார். மேலும் பள்ளியில் நடத்திய விசாரணையில் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சிவராமன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதை அடுத்து நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளரான சிவராமன், குற்றத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், தாளாளர் சாம்சன் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிவராமன் விவகாரம் பெரிய அளவில் வெடித்த நிலையில் அக்கட்சியின் இளைஞர் பாசறை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து முதல்வர் சதீஷ்குமார், தாளாளர் சாம்சன் உள்ளிட்ட 7 பேர் நேற்று கைதான நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த சிவராமனை கைது செய்ய நான்கு தனி படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சிவராமன் கோவையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
கைதான போலி பயிற்சியாளர் சிவராமன் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலியல் வழக்கில் கைதாகி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் போலி பயிற்சியாளரும், நா.த.க. மாஜி நிர்வாகியுமான சிவராமன் பள்ளியில் படித்த காலத்தில் என்.சி.சி. மாணவராக இருந்தார். இதில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் தன்னை என்.சி.சி. அலுவலராக காண்பித்து தனியார் பள்ளி, கல்லூரிகளில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. குறிப்பாக, புகாருக்குள்ளான தனியார் பள்ளியில் என்.சி.சி. பயிற்சிக்கு மாணவி ஒருவருக்கு ரூ.1500 பணம் வசூல் செய்துள்ளார். இந்த பணத்தை கொண்டு, மாணவர்களுக்கு பதக்கங்கள், கேடயங்கள் தயார் செய்து அதில் என்.சி.சி. ஸ்டிக்கர்களை போலியாக ஓட்டி வழங்கி உள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.