சென்னை: சென்னை மத்திய குற்றப்பிரிவில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகள் மீது விசாரணை நடத்தி நீதிமன்றம் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.அதன்படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா தலைமையிலான மத்திய குற்றப்பிரிவு போலீசார் நிலுவையில் உள்ள வழக்குகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், 2 தேசிய வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் சுவாமிதாஸ் பாண்டியன் (62), அவரது மனைவி மேரி ஜாக்குலின் (59) ஆகியோர் தொழில் வளர்ச்சிக்காக ரூ.20.75 லட்சம் கடன் பெற்றுள்ளனர்.ஆனால் கடன் தொகையை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றியுள்ளனர். இதுதொடர்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் வாசுதேவன் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உதவி மேலாளர் பாலன் ஆகியோர் அளித்த புகாரின்படி விசாரணை நடத்தி தம்பதி மீது எழும்பூர் கூடுதல் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தம்பதி தலைமறைவாகினர். அவர்களை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த மோசடி தம்பதியை தனிப்படை போலீசார் சூரப்பட்டு பகுதியில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலி ஆவணம் மூலம் 2 வங்கிகளில் ரூ.20.75 லட்சம் மோசடி வழக்கில் தம்பதி கைது: 2 ஆண்டாக தலைமறைவானவர்கள் சுற்றிவளைப்பு
0