புதுடெல்லி: ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 42 போலி நிறுவனங்கள் கூட்டாக ரூ.199 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. பெயரளவில் மட்டுமே செயல்படும் போலி நிறுவனங்கள், போலி ரசீதுகள் வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் விதமாக ஒன்றிய ஜிஎஸ்டி.யின் கிழக்கு டெல்லி ஆணையரகம் அதிரடி சோதனையில் இறங்கியது.
இதில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய 42 போலி நிறுவனங்கள் கூட்டாக ரூ.199 கோடி உள்ளீட்டு வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதில் முக்கியமாக செயல்பட்ட 3 பேரை அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை பாட்டியாலா முதன்மை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்ற அதிகாரிகள் அவர்களை நேரில் ஆஜர்படுத்தினர். அவர்களை 2 வாரம் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.