சென்னை: போலியான வர்த்தக முதலீடு செய்ய வைத்து ரூ.2 கோடி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் தெரிவித்ததாவது: சமீபகாலமாக சைபர் குற்றவாளிகள் இணைய வழி வர்த்தகத்தின் வாயிலாக மக்களை ஏமாற்றுவதற்கான புதிய முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். போலியான வர்த்தக வாய்ப்புகளை முன்வைத்து வாட்ஸ் ஆப் மூலம் பெரிய லாபம் திரும்ப கிடைக்கும் என எதிர்பார்ப்பை உருவாக்கி முதலீட்டாளர்களை மாற்றி மக்களின் பணத்தை மோசடி செய்கின்றனர்.
கடந்த ஜூலை மாதத்தில் புகார்தாரரிடம் தொலைபேசியில் எதிர் முனையில் பேசியவர் தன்னை போரெக்ஸ் டிரேடிங் நிறுவனத்தில் பணியாற்றுபவர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார். இதுபோன்ற போலியான வாக்குறுதிகளை சமூக ஊடகங்கள். குறுந்தகவல் சேவைகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைப் பயன்படுத்தி புகார்தாரரின் மனதில் மோசடிக்காரர்கள் நம்பிக்கையை கொடுத்துள்ளார்கள் மேலும் இந்த நிறுவனம் செபியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என புகார்தாரரை நம்ப வைத்துள்ளனர்.
புகார்தாரரை இனிமையான வார்த்தை மூலம் நம்பவைத்தும் மற்றும் பல முக்கியமான தொழிலதிபர்கள் பெயர்களை சொல்லியும் நம்பவைத்து உள்ளார்கள். தொடர்ந்து மோசடி செய்யும் நிறுவனத்திலிருந்து பலர் பாதிக்கப்பட்டவரை தொடர்புகொண்டு முதலீடு செய்ய வைதுள்ளார்கள். இதனால் பாதிக்கப்பட்ட நபர் பல பரிவர்த்தனைகளில் ரூ.22220400ஐ பல்வேறு வங்கி கணக்குகளில் முதலீடு செய்துள்ளார்.
மோசடிக்காரர்கள் மொத்த முதலீட்டை திருப்பித் தருவதாகக் கூறி மேலும் ரூபாய் 10,00,000 முதலீடு செய்ய வேண்டுமென்று ஏமாற்ற முயன்றுள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவருக்கு சந்தேகம் வந்ததால், தன்னுடைய பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். உடனடியாக மோசடிக்காரர் தன்னுடைய கம்பெனி பெயரை மாற்றி உள்ளார். இதிலிருந்து புகார்தாரர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சைபர் குற்றம் ரிபோர்டிங் போர்ட்டலில் புகார் பதிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில், மாநில சைபர் கிரைம் போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டது.
இந்த வழக்கின் நிதி பரிவர்த்தனைகளை சைபர் குற்றப் பிரிவு அலுவலர்கள் தீவிரமாக ஆராய்ந்தபோது, கேரளாவில் உள்ள உபயத்துல்லா என்பவர் Swabah Feed agency பெயரில் எஸ்பிஐ வங்கியில் ஒரு பொய்யான கணக்கு தொடங்கி மோசடி செய்த நபருக்கு கொடுத்து அதன் மூலம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதன் மூலம் மோசடிக்காரர்களுக்கு தேவையான பணத்தை வழங்கியதுடன் அதை மோசவு செய்யும் நோக்கத்திலும் பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளி உபயதுல்லா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மோசடிகளில் இருந்து எப்படி தப்புவது?
* மோசடி அழைப்பு என அறிந்தால் உடன் இணையவழி குற்றப் பிரிவு அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
* அதிகப்படியான லாபம் வருமென யாராவது தெரிவித்தால் அதன் மூலம் மோசடி அதிகளவில் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
* தனிப்பட்ட, நிதி சார்ந்த தகவல்களை அறிமுகமில்லாத நபர்களிடம் தொலைபேசியில் அளிக்காதீர்கள்.
* உங்கள் வங்கி மற்றும் கடன் பெற்ற கணக்குகளில் அனுமதிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதும் உள்ளதா என தவறாமல் சரிபார்க்கவும்.
* மோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.govin என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.