* வாடகை வீட்டில் இருந்த லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பெரியமணகுளத்துகாட்டை சேர்ந்தவர் நவீன்குமார் (30), இவர் கோவையில் கனரா வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் நாமக்கல் ராமாபுரம் புதூரை சேர்ந்த தன்வர்த்தினி (27) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பொள்ளாச்சியில் தன்வர்த்தினி ஆர்டிஓவாக இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் நவீன்குமாருக்கு திருமணம் செய்துவைத்தனர். திருமணம் முடிந்த சில மாதங்களில், தன்வர்த்தினி பொள்ளாச்சியில் ஆர்டிஓவாக இல்லை. மோசடியாக ஏமாற்றி தன்னை திருமணம் செய்து கொண்டது நவீன்குமாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் சவீதா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் தன்வர்த்தினியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பொள்ளாச்சி அருகே மாய்க்கன்நாம்பட்டியில், தன்வர்த்தினி குடியிருந்து வந்த வாடகை வீட்டில் சுமார் 2 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது தன்வர்த்தினியின் தந்தை ரவீந்திரனை போலீசார் உடன் அழைத்துச்சென்றனர். சோதனையின்போது வீட்டில் இருந்த லேப்டாப், மெமரிகார்டு மற்றும் போலி ஆவணங்கள் சிலவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆர்டிஓவாக இருப்பதாக கூறி, வங்கி அதிகாரியை தன்வர்த்தினி திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி நவீன்குமாருக்கும், தன்வர்த்தினிக்கும் வையப்பலையில் கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் இந்த திருமணத்தை வேலகவுண்டம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். தன்வர்த்தினி பொள்ளாச்சியில் ஆர்டிஓவாக இருப்பதாக கூறியதால், அவருக்கு நவீன்குமார் மாய்க்கன்நாம்பட்டியில் ரூ 18 ஆயிரம் மாதவாடகையில் ஒரு வீடு எடுத்து கொடுத்துள்ளர். அந்த வீட்டில் தான் தன்வர்த்தினி தனது தாய் கல்பானவுடன் வசித்து வந்தார். நவீன்குமார் வாரத்திற்கு ஒரு முறை மட்டும் மனைவியை பார்க்க சென்றுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன், நவீன்குமாரின் உறவினர் செந்தில்வேல் பொள்ளாச்சி ஆர்டிஓ அலுவலகம் சென்று விசாரித்தபோது, அங்கு தன்வர்த்தினி ஆர்டிஓவாக இல்லை என்பதும் அவர் ஏமாற்றி திருமணம் செய்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. நவீன்குமாருக்கு சந்தேகம் வலுக்கவே கணவன்,மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இது பற்றி விசாரிக்க, நவீன்குமார் தனது பெற்றோருடன் சென்னை தலைமை செயலகம் சென்றுள்ளார். அங்கிருந்த தன்வர்த்தினி, அமுதா ஐஏஎஸ் தான் எங்களுக்கு துறைஅதிகாரி. அவரிடம் அழைத்துச் சென்று காட்டுகிறேன் என கூறியுள்ளார். பின்னர் மேடம் பிசியாக இருப்பதாக கூறி கணவரை திருப்பி அனுப்பி வைத்துள்ளார். இந்த பிரச்சனைக்கு பின், தன்வர்த்தினி தலைமறைவாகிவிட்டார். பொள்ளாச்சி வீட்டிற்கும் வரவில்லை.
இதை நேற்று பொள்ளாச்சியில் வாடகை வீட்டின் உரிமையாளரிடம் போலீசார் விசாரித்த போது தான் தெரிந்தது. தன்வர்த்தினி, கடந்த இரண்டு மாதமாக இங்கு வரவில்லை. தன்வர்த்தினிக்கு, போலி பணி நியமன உத்தரவு கடிதம், போலி அடையாள அட்டை தயாரித்த கொடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தவழக்கில் மேலும் பலருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. நவீன்குமார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் இந்த வழக்கை உடனடியாக விசாரிக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளனர்.
தன்வர்த்தினி தலைமறைவாக இருக்கவே, அவரது மொபைல் எண் மூலம் பல முறை போலீசார் அவரை தொடர்பு கொண்டு விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் அவர் விசாரணைக்கு வர மறுத்துள்ளார். இதையடுத்து போலீசார் ராமாபுரம்புதூரில் உள்ள தனர்வர்த்தினியின் வீட்டிற்குசென்று தன்வர்த்தினியை கைது செய்தனர். கடந்த ஒன்றரை மாதமாக தன்வர்த்தினி எங்கு தலைமறைவாக இருந்தார்?, நவீன்குமாரின் சொத்துக்களை அபகரிக்கும் முயிற்சியா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.