திருச்சி: திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அடுத்த அல்லூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். பாஜ முன்னாள் மண்டல தலைவரான இவரும், அதே ஊரை சேர்ந்த ஜெயராமன் மனைவி புவனேஸ்வரியும் வேளாண் கடன் பெறுவதற்காக அந்தநல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 5ம்தேதி மனு கொடுத்தனர். அதில் அடங்கல் சான்றிதழில் விஏஓ கையொப்பத்தை தாமாகவே போட்டதுடன், அலுவலக முத்திரையையும் போலியாக தயாரித்து பயன்படுத்தியது தெரியவந்தது.
சங்கத்தினர் விஏஓ தரப்பில் விசாரித்த போது சான்றிதழ் வழங்கியது உண்மையல்ல என்பது தெரியவந்தது. இதையடுத்து மனுவை நிராகரித்த கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பரமேஸ்வரன், ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து பிரகாஷ், புவனேஸ்வரி ஆகியோரை நேற்று கைது செய்தனர்.