வேலூர்: போலி பணி நியமன ஆணை வழங்கி ₹15 லட்சம் மோசடி செய்ததாக சென்னை பெண் அதிகாரி மீது வேலூர் எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ேவலூர் எஸ்பி அலுவலகத்தில் வேலூரை சேர்ந்த வினோத் கண்ணா என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
விராலிமலையை சேர்ந்த சரோஜினி என்பவர், உறவினர் மூலம் அறிமுகம் ஆனார். இவர் சென்னை மருத்துவத்துறையில் அரசு மருத்துவ ஆய்வாளராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் ‘தலைமை அலுவலகத்தில் இணை செயலாளர் எனக்கு நன்றாக தெரியும். மாநிலம் முழுவதும் மருத்துவத்துறையில் பல்வேறு இடங்களில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணியிடங்களுக்கு ஏற்ப நபர் ஒருவருக்கு ₹3.50 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை செலவாகும்’ என்று தெரிவித்தார்.
இதை நம்பி நானும், எனக்கு தெரிந்த நபர்களுக்கு தெரிவித்தேன். 4 பேர் அளித்த ₹15 லட்சத்து 80 ஆயிரத்தை பல்வேறு தவணையாக சரோஜினி வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தேன். பணத்தை பெற்றுக்கொண்ட அவர் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் வேலூர் சுகாதாரத்துறை இணை இயக்குநரின் கையெப்பமிட்டுள்ள அடையாள அட்டை வழங்கினார்.
இந்த ஆணையை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் காண்பித்தபோது, அவை போலியானவை என்றும், மோசடியாக தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். எனவே சரோஜினி மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.