போபால்: போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி போலீஸ் பணிக்கு தேர்வெழுதிய 22 பேர் மீது வழக்கு பதிந்து மத்திய பிரதேச போலீஸ் விசாரித்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் நடந்த காவலர் பணிக்கான தேர்வுகளில் போலி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்திய பெரும் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு, மத்தியப் பிரதேச பணியாளர் தேர்வு வாரியம், காவலர் பணியிடங்களுக்காக ஆன்லைன் தேர்வை நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2024ம் ஆண்டில் உடற்தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இந்தத் தேர்வுகளின் போது, ஐந்து தேர்வர்கள் போலி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி தேர்வில் பங்கேற்றதை தேர்வுக் குழு கண்டறிந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இதேபோன்ற ஆதார் அட்டை முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. இந்த முறைகேடுகள் தொடர்பாக, இதுவரை 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 22 தேர்வர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று சட்டம் மற்றும் ஒழுங்கு ஐ.ஜி. அன்ஷுமன் சிங் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், தேர்வர்களின் அடையாளத்தை முழுமையாகச் சரிபார்க்காமல், ஆதார் அட்டைகளில் திருத்தங்களைச் செய்த விற்பனையாளர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது; எனவே அவர்களும் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், ‘தகுதியான தேர்வர்களுக்கு அநீதி இழைக்கும் இதுபோன்ற குற்றச் செயல்கள் மத்தியப் பிரதேசத்தில் பொறுத்துக்கொள்ளப்படாது.
மேலும், வெற்றி பெற்ற அனைத்து தேர்வர்களின் பயோமெட்ரிக் தரவுகள் மற்றும் ஆதார் வரலாறு ஆகியவற்றை காவல் தலைமையகம் முழுமையாக ஆய்வு செய்து வருகிறது. முறைகேடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை உறுதி செய்யப்படும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.