Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் விழா ஏற்பாட்டாளருக்கு சிறை தண்டனை: கர்நாடகாவில் புதிய சட்டம்

பெங்களூரு: விழாக்கள், நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட விழாவின் ஏற்பாட்டாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கர்நாடக அரசு கொண்டு வரவுள்ளது. ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அரசியல் மற்றும் மத கூட்டங்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும் என சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வென்றதையடுத்து, தலைநகர் பெங்களூருவில் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கர்நாடகாவில் புதிய சட்டமுன்வடிவை கொண்டுவந்துள்ளது.

கர்நாடக அமைச்சரவையில் முன்மொழியப்பட்டுள்ள சட்ட மசோதாவில், காவல்துறை உத்தரவுகளுக்கு கீழ்படியாத அல்லது சட்டத்தை மீறும் எவருக்கும் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரு தண்டனைகளுமே விதிக்கப்படாலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விளையாட்டு, சர்க்கஸ் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் முன் காவல்துறை அனுமதியை பெறத்தவறினாலோ, கூட்டத்தினை நிர்வகிக்க முடியாவிட்டாலோ , ஏற்படும் எந்தவொரு தீங்குக்கும் ஈடு செய்யாவிட்டாலோ கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்படும் பட்சத்தில், 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படுமென்றும் சட்டமசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அலட்சியத்தால் உயிரிழப்புகள் நேர்ந்தால், அது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படும் எனவும், அவர்களால் ஜாமீனில் வெளி வர முடியாது என்றும், இந்த வழக்குகளை முதல்தர நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் கோயில் தேரோட்டம், பாரம்பரிய மதக்கூட்டங்களான கண்காட்சிகள், படகு திருவிழா , பல்லக்கு ஊர்வலம் போன்ற கொண்டாட்டங்கள் இந்த மசோதாக்களின் கீழ் வராது என விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.