எல்லோர் வாழ்விலும் வெற்றி தோல்வி என்பது நாம் செல்லும் பாதையில் உள்ள மேடுபள்ளம் போன்றது. வெற்றியைக் கொண்டாடும் நாம்… தோல்விக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும். எங்காவது நீங்கள் தவறு செய்யாமல் தோல்வி உங்களை நெருங்கவே நெருங்காது.தோல்விகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் உங்கள் தவறுகளைப் புரிந்துகொண்டீர்கள் என்று அர்த்தம். சாதனையாளர்கள் அத்தனை பேரும் தோல்விகளை எதிர்கொண்டவர்கள் தான். அவர்கள் தோல்விகளால் ஒருபோதும் துவண்டுபோனதில்லை.தோல்விகூட நமக்கு ஒரு புதிய வெற்றியைக் கொடுக்கும். தோல்விகளில் இருந்து அப்படி ஒரு புதிய வெற்றியைப் பெற்றவர் தான் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் பிரெய்லி. ‘ஐயோ கடவுளே’ என்ற அலறல் சத்தம் கேட்டு செருப்பு தைத்துக் கொண்டிருந்த தந்தை ஓடிவந்தார்.மகன் கண்ணில் இருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பதறித் துடித்தார்.சிறுவன் விளையாட்டாகச் செருப்பு தைத்த அந்த ஊசியால் கண்ணைக் குத்திக் கொண்டான்.குத்துபட்ட கண்ணுக்குச் சிகிச்சை மேற்கொண்டபோது துரதிஷ்டவசமாக மறுகண்ணும் பாதிக்கப்பட்டு, இரு கண்களிலும் அவர் பார்வையை இழந்தார். ஆனால் அவர் பிற்காலத்தில் பார்வையிழந்தோரின் கல்விக்கண் திறந்த கருணைத் தெய்வம் ஆனார்.
ஆறு புள்ளிகளில் 63 வகை எழுத்துகளை எழுதிக்காட்டினார். முரட்டுத்தாளில் சிறுசிறு துளைகளால் அமைக்கப்படும் எழுத்துகளை விரலால் தடவிப் படிக்கும் முறை அவர் பெயராலேயே ‘பிரெய்லி’என்று அழைக்கப்படுகிறது. நிமிடத்திற்கு 145 வார்த்தைகளை பிரெய்லி மூலம் படிக்க முடியும். பார்வையிழந்த பலர் இந்த புதிய மொழியின் மூலம் பட்டதாரிகளாகி வேலைவாய்ப்புகளையும் பெற்றுள்ளனர்.லூயிஸ் பிரெய்லி,கண்களில் பார்வை போய்விட்டதே என்று துவண்டுபோயிருந்தால், இப்படியொரு கண்டுபிடிப்பு உலகுக்கு கிடைத்திருக்குமா? செய்யும் செயல்களில் இடர்ப்பாடுகள் வரலாம். எதிர்பாராத விபத்துகளால் பின்னடைவு ஏற்படலாம். எடுத்த காரியத்தை முடித்தே தீர்வது என்கிற உறுதியுடன் ஒன்றைச் செய்யத் தொடங்கினால், அது முடிந்தே தீரும். அதிலும் உங்கள் செயல் அறம் நிறைந்ததாய் இருந்தால் மக்களின் பேராதரவும் அதற்குக் கிட்டும். அதற்கு உதாரணமாக இன்னொரு மனிதரின் வெற்றிக் கதையைப் பார்க்கலாம்.ஜான் பென்னிகுவிக்கைத் தெரியும் தானே… ஆங்கில அரசில் பொதுப்பணித்துறை சிவில் பொறியாளராக சென்னையில் பணியாற்றியவர். ஒருமுறை அவர் சென்னையில் இருந்து தென்தமிழகம் செல்லும்போது அங்குள்ள மக்கள் பசியிலும், வறுமையிலும் வாடுவதைக் கண்டு மிகுந்த மனவேதனை அடைந்தார். வைகைநதியை மட்டுமே நம்பி வானம் பார்த்த பூமியாக இருந்த தென்னகத்தை எப்படி பசுமையாக்குவது என்று யோசித்தார்.
அப்போதுதான் அவரது கண்களில் முல்லைப்பெரியாறு தென்பட்டது.மேற்கு நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கும் அந்த நதியை அரபிக்கடலில் வீணாக கலக்கவிடாமல்,கிழக்கு நோக்கி திருப்புவதற்கு ஒரு அணை கட்டினால்,தென் தமிழக மாவட்டங்களை பசுமை போர்த்திய பூமியாக மாற்றி விடலாம் என ஆங்கிலேய அரசுக்குத் தெரிவித்தார். அரசும் யோசித்தது. பென்னிகுவிக் தீர்க்கமாகச் சொன்னார். பல லட்சம் பேர் பயனடைவார்கள். விவசாயம் பெருகும், மக்களின் வறுமை ஒழியும் என்றார்.மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு ஆங்கில அரசு அனுமதி அளித்தது.பணிகள் வேகமாக நடைபெற்றன.மூன்று ஆண்டுகள் கடின உழைப்புடன் ஏராளமான பணிகள் முடிந்து விட்டன.இந்நிலையில் திடீரென்று ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் அந்த அணை முழுவதும் அடித்துச் செல்லப்பட்டது. ஆனால் பென்னிகுவிக்கின் நம்பிக்கையை அந்த காட்டாற்று வெள்ளத்தால் அசைக்க முடியவில்லை. மீண்டும் ஆங்கில அரசிடம் உதவி கேட்டார். அரசு உதவி தர மறுத்தது. அது மட்டுமல்ல அணை கட்ட உனக்குத் தெரியவில்லை என்று ஏளனம் செய்தது. இவ்வளவு பணத்தை அணை கட்டுவதற்குத்தான் பயன்படுத்தினாயா? என ஆங்கிலேய அரசு சந்தேகப்பட்டு பென்னிகுவிக் மீது விசாரணைக் கமிஷன் போட்டது. பென்னிகுவிக் சோர்ந்து போகவில்லை.தன்னம்பிக்கையுடன் தானே களத்தில் இறங்கினார்.மக்களைத் திரட்டி வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.
தன் சொத்துகளை முழுவதுமாக விற்றார்.இதனால், எந்த அளவுக்கு அவரை வறுமை ஆட்கொண்டது என்றால், ஆங்கிலேயர்களின் சமூகத்தில் திருமணத்தின்போது கொடுக்கப்படும் கட்டிலை மிகவும் புனிதமாகக் கருதுவார்கள். அதைக்கூட விற்கும் நிலைக்கு ஆளாகினார். கடைசியில் எதுவுமே இல்லாத நிலைக்கு வந்தார். ஆனால், எட்டு ஆண்டுகள் பென்னிகுவிக்கின் கடின உழைப்பால் உருவான முல்லைப்பெரியாறு அணை இன்றும் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது.பென்னிகுவிக் அணை கட்டிய பின் சொன்ன வார்த்தைகள்‘‘இந்த உலகத்தில் இருக்கப்போவது ஒரே ஒரு முறை. எனக்கு செய்ய கிடைத்த நல்ல செயலை, நான் அலட்சியப்
படுத்தவோ,தள்ளிப் போடவோ இல்லை செய்து முடித்து விட்டேன்’’என்றார்.இந்த அணை மூலமாகச் சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பசுமை பெற்றது. சொத்தை இழந்து வறுமைக்குத் தள்ளப்பட்ட பென்னிகுவிக்கிற்கு தென்மாவட்ட மக்கள் கோயில் கட்டி சிலை அமைத்தும் மாலை அணிவித்து பொங்கல் வைத்து மரியாதை செலுத்துகிறார்கள்.தேனி மாவட்டத்தில் விவசாயக் குடும்பங்களின் வீடுகளில் பென்னிகுவிக் படம் வைக்கப்பட்டிருக்கும்.வீடுகளில் குழந்தைகளுக்கு பென்னிகுவிக் என்று பெயர் வைக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக் நினைவாக தேனி மாவட்டம் கூடலூரில் பென்னிகுவிக் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.‘உண்மை ஒருநாள் வெல்லும்.இந்த உலகம் உன் பேர் சொல்லும். அன்று ஊரே போற்றும் மனிதர் நீயே’ என்னும் வைரமுத்துவின் வரிகள் பென்னிகுவிக்கை நினைவுபடுத்துகிறது அல்லவா?தன் வாழ்வில் அனைத்தையும் இழந்து,தோல்வி அவமானங்களை எதிர்கொண்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற சமூக அக்கறையை நிலைநாட்டிய இந்த அற்புத மனிதரின் வாழ்வு.ஒவ்வொரு இளைஞனும் சமூக அக்கறையுடன் வாழவேண்டும் என்பதைப் பறைசாற்றும் அற்புத பாடமாகும்.