அம்பத்தூர்: அம்பத்தூர் போலீஸ் நிலையம் எதிரே மூடிக்கிடந்த தனியார் தொழிற்சாலைக்குள் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். சடலத்தை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே உள்ள டன்லப் மைதானத்தின் அருகே, பல ஆண்டுகளுக்கு முன் இயங்கிய தொழிற்சாலை மூடப்பட்டு, பாழடைந்த நிலையில் உள்ளது.
இங்கிருந்து துர்நாற்றம் வீசுவதாக அம்பத்தூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் ரத்தவெள்ளத்தில் இளம்பெண்ணின் உடல் கிடப்பது தெரிந்தது. பின்னர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் தடவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும்.
இறந்து 2 நாட்களான நிலையில் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததும், அருகில் மதுபாட்டில்கள் கிடந்ததும் தெரிய வந்தது. இவரை உல்லாசத்துக்கு அழைத்து வந்த நபர்கள் ஏதாவது தகராறு ஏற்பட்டு கொலை செய்தனரா அல்லது வேறு ஏதாவது பிரச்னையா என்ற கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும், மூடிக்கிடக்கும் தொழிற்சாலையில் அவ்வப்போது இரும்பு பொருட்களை எடுப்பதற்காக நரிக்குறவ இனமக்கள் சிலர் வருவதாகவும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளமும் நரிக்குறவ இன பெண் தோற்றம்போல் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். அம்பத்தூர் போலீஸ் நிலையம் அருகே இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.