கோவை: கோவை கொடிசியாவில் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவி வழங்குதல், உலக முதலீட்டாளர் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட எம்எஸ்எம்இ நிறுவனத்தினருடன் கலந்தாய்வு கூட்டம் மற்றும் சேலம், கோவை மண்டலங்களின் மாவட்ட தொழில் மைய அலுவலர்கள், சிட்கோ கிளை மேலாளர்கள், சேகோசர்வ், இண்ட்கோசர்வ் அலுவலர்களுடன் திறனாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 8 மாதத்தில் 1,645 நிறுவனங்கள் ரூ.16 ஆயிரத்து 613 கோடியில் உற்பத்தி துவங்கி உள்ளது. இதில், 60,436 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. கடந்த மூன்றே கால் ஆண்டு ஆட்சியில் 26 தொழிற்பேட்டை துவங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் சமச்சீரான தொழிற் வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.
அதிக தொழில் வளர்ச்சி ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த உள்ளோம். மற்ற மாநிலங்களில்விட மின் கட்டணம் தமிழ்நாட்டில் குறைவுதான். ஏற்கனவே, கடந்த ஆட்சியில் உதய் திட்டத்தில் கையெழுத்து போட்டதால்தான் மின் கட்டணம் உயர்ந்து உள்ளது. இதற்கு நாங்கள் காரணம் இல்லை. கடந்த ஆட்சியாளர்கள்தான் காரணம். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தொழிற்சாலைகளுக்கு ‘பீக் ஹவர்’ மின்கட்டண பிரச்னைகளுக்கு முதல்வருடன் கலந்து பேசி தீர்வு காணப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளில் மின் கட்டணம் பிரச்னையில் சிறு, குறு தொழிலாளிகள் நஷ்டத்தை நாங்கள் ஏற்று ரூ.650 கோடி செலுத்தி உள்ளோம். பீக் ஹவர்களில் மீட்டர் போட கூடாது என கூறியுள்ளோம். அனைத்து பிரச்னைகளையும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினர்.