‘‘தேர்தல் நெருங்குவதால் புதுச்சேரி அரசின் சலுகைகள் தாராளமானாலும் வாய்மொழி உத்தரவால் பணியாளர்கள்தான் சிரமத்திற்கு ஆளாகி இருக்காங்களாமே தெரியுமா..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘சுற்றுலாவுக்கு பெயர்போன பாண்டிச்சேரியில் தேர்தல் நெருங்குவதால் அரசின் சலுகைகள் தாராளமாகி இருக்காம்.. காலத்தோடு நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் புல்லட்சாமி முனைப்பு காட்டுறாராம்.. சமூக நலனில் அக்கறை கொண்ட துறை மூலமாக முதியவர்களுக்கான போர்வை மற்றும் காலணிகள் வழங்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்காம்.. அந்தந்த அங்கன்வாடி மையங்கள் மூலமாக இவற்றை விநியோகிக்கும் பணி நடக்கிறதாம்.. ஆனால் சில தொகுதிகளிலோ நேரடியாக தாங்களே பயனாளிகளுக்கு இதை வழங்க மக்கள் பிரதிநிதிகள் முடிவெடுத்து விட்டார்களாம்.. அதுவும் காலத்தோடு வழங்காமல் ஒருவாரமாக அறைகளில் கிடப்பில் கிடக்கிறதாம்.. ஏற்கனவே எலிகள் தொல்லை இருப்பதால் போர்வையையும், காலணிகளையும் பாதுகாக்க முடியாமல் பணியாளர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருவதால் அவர்களது முகம் வாடிக்கிட்டு இருக்காம்.. எப்போதுதான் நலத்திட்டங்கள் கிடைக்கும் என்ற கொந்தளிப்பு முதியவர்களிடம் ஒருபுறமிருக்க, வாய்மொழி உத்தரவை மீற முடியாமல் பரிதவித்து வருகிறார்களாம் அங்கன்வாடி பணியாளர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புகார் தொடர்பாக விசாரிக்க வேண்டிய பெண் அதிகாரி மேல எல்லை தாண்டியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மான்செஸ்டர் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் பல்வேறு ஊழியர்கள் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றனராம்.. நகரமைப்பு பிரிவில் பணியாற்றும் இளநிலை எழுத்தர்கள் 4 பேர், உதவி கமிஷனர் உள்ளிட்ட மேலதிகாரிகள் கையெழுத்தை இவர்களே போட்டு, கட்டிட வரைபட அனுமதி, கட்டிட வரன்முறைப்படுத்தும் ஆர்டர் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆர்டர்களை வழங்கி வருவதாகவும், இதன்மூலம் பல லட்சம் ரூபாய் கல்லா கட்டுவதாகவும் புகார் எழுந்தது.. இதுதொடர்பாக 6 எழுத்து பெயர் கொண்ட ஒரு பெண் அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமித்து, கமிஷனர் உத்தரவு போட்டார். அந்த பெண் அதிகாரியோ, விசாரணை அறிக்கையை தனக்கு மேல்நிலையில் உள்ள உதவி கமிஷனரிடம் ஒப்படைத்து, உரிய அனுமதி பெறாமல், நேரடியாக கமிஷனரிடம் சப்மிட் செய்துவிட்டாராம்.. இதனால், உதவி கமிஷனர் கடுப்பாகிவிட்டாராம்.. இப்படி எல்லை தாண்டி சென்றால், நாங்கள் இந்த சீட்டில் இருந்து என்ன பயன் என அந்த பெண் அதிகாரியை வறுத்து எடுத்துவிட்டாராம்.. இதற்கிடையில், 6 எழுத்து பெயர் கொண்ட அந்த பெண் அதிகாரி, முழுமையான விசாரணை நடத்தாமல், சிலரை தப்பிக்க விட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கு.. அதனால், விரைவில் இவரைப்பற்றி விசாரிக்க இன்னொரு அதிகாரியை நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள், சில நியாயமான ஊழியர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாஜி அமைச்சர்களுக்கு டப் கொடுக்கும் அளவுக்கு பூட்டு மாவட்டத்தில் கோஷ்டி அரசியல் செய்யும் மாஜி எம்எல்ஏவான டாக்டர் ஒருவர், சுகாதாரத்துறை அமைச்சர் பதவி தருவதாக சேலத்துக்காரர் சொன்னதாக அடிபொடிகளிடம் கூவி வர்றாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தில் ஏற்கனவே மாஜி உளறல்காரரும், மாஜி ஷாக்கடிக்கும் துறையை கவனித்தவரும், இரு கோஷ்டிகளாக அரசியல் செய்து வர்றாங்க.. தற்போது வேடன் ெபயரில் துவங்கும் தொகுதியின் மாஜி எம்எல்ஏவான டாக்டர், இந்த இரு கோஷ்டிக்கும் டப் கொடுக்கும் வகையில் மூன்றாவதாக ஒரு கோஷ்டியை உருவாக்கி வருகிறார். சேலத்துக்காரரின் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறி கோஷ்டி அரசியல் களத்தை சூடாக்கி வரும் டாக்டர், வரும் தேர்தலில் வேடன் பெயரிலான தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு, எம்எல்ஏவாகி, சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை தனக்கு தருவதாக சேலத்துக்காரர் கூறியுள்ளார் என தனது அடிபொடிகளிடம் நேரடியாக கூறி வருகிறாராம்.. சீட் கிடைப்பதே பெரிய விஷயம்… இதுல இவரு ஜெயிச்சி, ஆட்சியையும் புடிச்சி, அமைச்சர் ஆகப் போறாராக்கும்…இருக்கிறாரா என கூட இருக்கிறவர்களே ஒருவருக்கொருவர் புன்னகைத்த படியே கிசுகிசுத்துக் கொள்கிறார்களாம்.. இவரது சுகாதார அமைச்சர் பேச்சு, இரு மாஜிக்களையும் ரொம்பவே சூடாக்கி இருக்கிறதாம்.. இதனால், கட்சி விழாக்களில் இவரை ஓரங்கட்டி விட்டு மற்றொரு மாஜியான சேலத்துக்காரர் பெயரைக் கொண்டவரை இவருக்கு போட்டியாக மேடையேற்றி வருகின்றனராம்.. வேடன் தொகுதிக்கு அவரை தயார் படுத்தி வருகின்றனராம்.. தற்போது எம்எல்ஏ சீட் யாருக்கு என்பதில் கடும் மல்லுக்கட்டு நடக்காம்.. இதோடு அமைச்சர் பதவி பேச்சு குறித்து சேலத்துக்காரரின் கவனத்திற்கு இரு மாஜிக்களும் கொண்டு செல்ல, தற்போது அடக்கி வாசித்து வருகிறாராம் டாக்டர்.. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில் பூட்டு மாவட்ட இலை தரப்பில் இப்போதே பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தொண்டர்களுக்கு கண் கலங்க கிளாஸ் எடுத்து கடைசியில் நொந்து கொண்டாராமே கட்சி தலைவர் தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாநகரில் சிறுத்தை பெயர் கொண்ட அரசியல் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்துச்சாம்.. அந்த கூட்டத்தில கலந்துகொண்ட கட்சியின் தலைவரு, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் நடவடிக்கையால் நொந்து போனாராம்.. தன்னோட உடல்நிலை மற்றும் சமீபகாலமாக ஏற்படும் உபாதைகள் பற்றி எடுத்துச் சொல்லி 2 மணி நேரத்திற்கு அட்வைஸ் கொடுத்தாராம்.. ஆனாலும், அந்த கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், தலைவர் சொல்றதை கேட்காமல், தொடர்ந்து மேடையில் ஏறி டென்ஷன் ஆக்கிட்டாங்களாம்..
ஒரு கட்டத்தில், என்னை சுற்றி ஒவ்வொருவரும் 100 கிலோ எடையில் 10 பேர் வந்து, அதாவது ஒரு டன் அளவிற்கு சுற்றி நின்று நெறிக்கிறீர்கள்.. முன்னால் வந்து நெஞ்சிலேயே கை வைத்து தள்ளுகிறீர்கள்.. என்னால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்.. நின்றாலும் உடல் வலிக்கிறது, படுத்தாலும் உடல் வலிக்கிறது, என மிகவும் கண் கலங்கி பேசினாராம்.. ஒரு கட்சியை எப்படி கட்டுப்பாடாக வழிநடத்த வேண்டுமென கிளாஸ் எடுத்த அவரு, கடைசியில நாம சொல்றதை ஒருத்தரும் கேட்கவில்லையே என நொந்து கொண்டே, நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு புறப்பட்டு சென்றாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
கோஷ்டி மோதலில் மாஜி அமைச்சர்களுக்கு மாஜி எம்எல்ஏ ‘டப்’ கொடுப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
0