ஆவடி: ஆவடியில் பேஸ்புக் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகவேணி (28). பியூட்டிஷனாக பணியாற்றி வந்தார். இவர் அன்பரசன் என்பவரை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். ஆனால் சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து விவாகரத்து பெற்று, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். திருமணத்திற்கு முன்பே முருகவேணிக்கு, பேஸ்புக் மூலமாக ஆவடி ஐயப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெய்குகன் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெய்குகனிடம் முருகவேணி வற்புறுத்தியுள்ளார். அதற்கு ஜெய்குகன் மறுப்பு தெரிவித்ததையடுத்து அடிக்கடி இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ஆவடியில் அமைந்துள்ள ஜெய்குகன் வீட்டிற்குச் சென்ற முருகவேணி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மீண்டும் கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மனம் உடைந்த முருகவேணி, ஜெய்குகன் வீட்டின் முன் நின்று, ஏற்கனவே தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தனக்குத்தானே உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதைக் கண்ட ஜெய்குகன் தீயை அணைக்க முயன்றார். அதற்குள் 70 சதவீதம் முருகவேணிக்கு தீக்காயம் ஏற்பட்டது. தீயில் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆவடி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.