உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் பழங்களைக் கொண்டு, முகத்தையும் பொலிவு பெறச் செய்யலாம். பழங்களில் இயற்கையாகவே சருமத்தை பிரகாசமாக்கும் ஆண்டி ஆக்சிடென்ட்களும், ஊட்டச் சத்துக்களும், மேலும் இயற்கையான நிறமி ஊக்கிகளும் நிறைந்திருக்கின்றன.அழகு நிலையங்களுக்கு சென்று ரசாயனம் கலந்த ஃபேசியல் செய்வதற்கு பதிலாக வீட்டிலேயே இந்த பழஃபேசியல் செய்து முகத்தை பிரகாசமாக்கலாம். பலவித பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக் கலவைகள் உருவாக்கலாம்,ஒவ்வொரு ஃபேஸ் பேக்கும் சருமத்திற்கு பலவிதமான பலன்களை கொடுக்கும். எப்படி என்று விரிவாக காண்போம்.
*ஆரஞ்சு பழத்தை மசித்து அதில் ஒரு கரண்டி மஞ்சள், ஒரு கரண்டி தேன் சேர்த்து நன்கு கலக்கவும். அதை முகம் கழுத்தில் தடவி இருபது நிமிடங்கள் வைத்திருந்து பின் சுத்தம் செய்யவும்.
* வாழைப்பழத்தை மசித்து அதில் ஒரு கரண்டி தேன், ஒரு கரண்டி மஞ்சள் சேர்த்து பசைபோல தயாரித்து முகம், கழுத்தில் தடவி இருபது நிமிடங்கள் விட்டு கழுவவும்.
*ஒரு அவகேடோ மற்றும் கிவிபழத்தை மசித்து கிரீம் போல ஆக்கி அதை முகத்தில் அரை மணிநேரம் தடவி,வெது வெதுப்பான நீரில் கழுவவும்.
*ஸ்ட்ராபெர்ரி பழங்களை மசித்து அதில் ஒரு கரண்டி தேன் சேர்த்து முகம், கழுத்தில் தடவி இருபது நிமிடங்கள் வைத்திருந்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.
* தர்பூசணியை எடுத்து மசித்து அதில் ஒரு கரண்டி தேன், ஒரு கரண்டி பாதாம் எண்ணெய் சேர்த்து முகம்,கழுத்தில் தடவி இருபது நிமிடங்கள்வரை வைத்திருந்து கழுவவும்.
இந்த பழஃபேசியலின் நன்மைகள்
சருமத்துக்கு ஊட்டமளிக்கிறது. கறைகள், நிறமிகளை போக்குகிறது. சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் மேம்படுத்துகிறது. இறந்த சரும செல்களை நிக்குகிறது. சருமத்தை சுத்தம் செய்கிறது. பளபளப்பான, பொலிவான சருமத்தை அளிக்கிறது.
பயன்படுத்தும் விதம்
முதலில் முகம், கழுத்துப்பகுதி சருமத்தை நன்கு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் தயாரித்து வைத்துள்ள பழபேசியல் பேக்கைப் போட்டு முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர நாளடைவில் முகப் பொலிவுகூடும்.
– அ.ப. ஜெயபால்